தமிழ்க் கதைகள்

ஆகஸ்ட் 4, 2008

தீயினால் சுட்ட புண்

கோப்பு வகை: சிறுகதை — வெட்டிப்பயல் @ 9:04 பிற்பகல்
Tags: , , , , , , ,

“டேய் கிருஷ்ணா! மணி 5:30 ஆச்சு… எழுந்திரி!” வழக்கம் போல் அம்மாவின் குரல்

“ஏம்மா! இப்படி உயிர வாங்கற!!! 7 மணிக்கு தான முகூர்த்தம்… பொறுமையா போயிக்கலாம்”

“ஏன்டா நேத்து நைட்டே நீ படுக்கறதுக்கு முன்னாடி சொன்னேன் இல்ல. காலைல சீக்கிரம் போகனும்னு”

“நம்ம கரெக்ட் டைமுக்கு போகலன்னா அங்க என்ன மாப்பிள தாலி கட்டறதையா நிறுத்த போறாரு”

“இப்படியெல்லாம் அதிக பிரசங்கித்தனமா பேசாத. உங்க அக்கா மாமனாரோட தம்பி பொண்ணு கல்யாணம். ஏற்கனவே அவ மாமனார் வேற உங்க அப்பா வராததுக்கே கோச்சுக்குவாரானு பயமா இருக்கு. நம்ம லேட்டா போனா அவ்வளவுதான்”

“அந்த ஆள எங்கயாவது போ சொல்லு. அப்பா என்ன ஓடி விளையாடவா போயிருக்காரு. வேலை விஷயமாத்தானே போயிருக்காரு. இவர் தப்பா நெனச்சா நாம ஒண்ணும் பண்ண முடியாது”

“இந்த பேச்சு பேசறதுக்கு நீ எழுந்திரிச்சு குளிச்சி, கெளம்பியிருக்கலாம்”

“சரி. நான் குளிச்சிட்டு வரேன்… காபி போட்டு வைங்க”

“அதெல்லாம் கல்யாண மண்டபத்துல போய் குடிச்சுக்கலாம்… நீ சீக்கிரம் குளிச்சிட்டு வா”

கல்யாண மண்டபத்திற்குள் போய் சேரும் போது மணி சரியாக 6:45.

“ஏம்மா… கொஞ்சம் சீக்கிரம் வரக்கூடாதா?” அக்காவின் குரலில் வழக்கம் போல் அதிகாரம் தெரிந்தது.

“எல்லாம் இவன் பண்ண வேல… இவன எழுப்பறதுக்குள்ள என் உயிரே போகுது”

“ஏன்டா ஒரு நாள் கூட உன்னால சீக்கிரம் எழுந்திரிக்க முடியாதா?”

“ஏன் இப்படி டென்ஷன் ஆகற??? நாங்க தான் முகூர்த்த நேரத்துக்கு முன்னாடி வந்துட்டோம் இல்ல”

“ஆமாம். எங்க உங்க வீட்ல இருந்து யாரையும் காணோம்னு இப்பதான் எங்க மாமியார் கேட்டாங்க”

“ஏன் ஆரத்தி எடுத்து வரவேற்கவா???”

“உனக்கு திமிருதான். அவுங்க முன்னாடி இப்படியெல்லாம் பேசி வைக்காத. அப்பறம் எனக்குத்தான் பிரச்சனை”

“சரி சரி நான் எதுவும் பேசல. அதுவும் இல்லாம நான் முகூர்த்தம் முடிஞ்சவுடனே கிளம்பறேன். எனக்கு கம்பெனில நிறைய வேலை இருக்கு”

“சரி முகூர்த்தம் முடிஞ்சவுடனே ஏழரைக்கு எல்லாம் பந்தி போட்டுடுவாங்க… சாப்பிட்டு போயிடு” அம்மாவின் குரல்

“என்னது பந்தியா??? ஏம்மா உயிர வாங்கற. காலங்காத்தால இவனுங்க கேசரி, இட்லி, வடை, பூரி, பொங்கல்னு தூக்கம் வர ஐட்டமா போட்டு உசுர வாங்குவாங்க. நான் கம்பெனில போய் ஏதாவது சாப்பிட்டுக்கறேன்”

“ஏன்டா ஐநூறு ரூபா மொய் வெக்கறோம். ரெண்டு பேர் கூட சாப்பிடலனா எப்படி?”

“ஏன். தெருல இருக்கறவங்க எல்லாத்தயும் கூப்பிட்டு வர வேண்டியதுதான? போம்மா நீ மொய் வெக்கறதால எல்லாம் என்னால சாப்பிட முடியாது”

எங்க அக்காவோட மாமியார் அவளை பார்த்து ஏதோ ஜாடை செய்து கூப்பிட அவள் இடத்தை காலி செய்தாள். அப்போது எங்களை பார்த்து நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி வந்து கொண்டிருந்தார்.

“நீங்க சாந்தி அம்மாதானே” எங்க அம்மாவை பார்த்து கேட்டார் அவர்.
ஏன் எல்லாம் இப்படி இருக்காங்க? கிருஷ்ணா அம்மானு சொன்னா குறைஞ்சிடுவாங்களா? வீட்ல இருக்குற பொண்ணு பேற சொல்லிதான் எல்லாம் சொல்லுவாங்க. அவளுக்கு தான் கல்யாணமாகி மாமியார் விட்டுக்கு போயிட்டா இல்ல. இனியாவது கிருஷ்ணா அம்மானு சொன்னா என்ன?
இந்த மாதிரி யார் சொன்னாலும் எனக்கு அவர்கள் மேல் வெறுப்புத்தான் வரும். இவர் மேலும் வெறுப்பு வர தவறவில்லை.

“ஆமாம். நீங்க அருண் அம்மாதான?”
எங்க அம்மா நல்லவங்களா இருக்காங்க. பரவாயில்லை!!!

“ஆமாம். பாத்து எவ்வளவு நாள் ஆச்சு. அருண் நாலு வயிசு இருக்கும் போது கொயம்பத்தூர்ல இருந்து கெளம்பனது”

“ஆமாம். பதினஞ்சு பதினாறு வருஷம் ஆகிடுச்சு. அதான் பாத்தவுடனே கொஞ்சம் சந்தேகமா இருந்துச்சு”

“ஆமாம் சாந்தி, கிருஷ்ணா எல்லாம் எப்படி இருக்காங்க. என்ன பண்றாங்க?”

“சாந்திக்கு கல்யாணமாயிடுச்சு. 1 பையன் இருக்கான் 2 வயசு ஆகுது. இதுதான் கிருஷ்ணா. இஞ்சினியரிங் படிச்சுட்டு இங்க ப்ரிக்கால்ல வேலை செய்யறான்”

“ஓ! இவ்வளவு பெரிய பையானா வளந்துட்டான்”

ஆமாம் பதினஞ்சு வருஷமா வளராம அப்பு கமல் மாதிரியா இருப்பாங்க? லேசாக சிரித்து வைத்தேன்.

“சின்ன வயசுல எப்பவும் நீ அவுங்க வீட்லதான் இருப்ப” அம்மா ஒத்து ஊதினார்கள்.

“இப்ப உனக்கு அதெல்லாம் ஞாபகம் இருக்காது. அருண்ட கிள்ளு வாங்கிட்டு அழுதுட்டே உங்க வீட்டுக்கு ஓடிடுவ”

ஓ! இது வேற நடந்துருக்கா… அவனுக்கு இருக்கு.

“ஆமாம் அதுக்குத்தான் இவன் சூடு வெச்சிட்டானே!” அம்மா என்னை பார்த்து முறைத்து கொண்டே சொன்னார்கள்.
ஓ!!! பரவாயில்ல… அப்பவே நம்ம வெயிட்டு காமிச்சிட்டோம். மனதிற்குள் ஒரு சந்தோஷம்.

“ஆமாம் அருண் இப்ப என்ன பண்றா?”

“அருண் இங்க தான் காலேஜ்ல படிக்கறா”

“ஓ!!! காலேஜ் படிக்கிறாளா??? எந்த காலேஜ்”

“இங்கதான் அவினாஸிலிங்கம்ல ஹோம் சயின்ஸ் படிக்கிறா. இங்கதான நின்னுட்டு இருந்தா. எங்க காணோம்???
அங்க நின்னுட்டு இருக்கா. இருங்க கூப்பிட்டு வரேன்”

ஓ!!! அருண் பையன் இல்லயா? மனசன கொழப்பறதுலயே இருங்க…
மம்மி வீட்டுக்கு வா உனக்கு இருக்கு

அந்த ஆண்ட்டி சென்று 2 நிமிடத்திற்குள் வந்தார்கள். இந்த முறை அவருடன் ஒரு அழகான தேவதை இருந்தாள். பிங் சுடிதாரில் அழகாக இருந்தாள்.
பொதுவா சொந்தகாரர்கள் இருக்கும் இடத்தில் நான் நல்ல பிள்ளை. ஆனா இந்த முறை அம்மா பக்கத்துல இருந்ததையும் மறந்துவிட்டேன்.

2 நிமிடத்திற்குள் அறிமுகப்படலம் முடிந்து திரும்பிவிட்டாள். நானோ கனவுலகிலே சஞ்சரித்து இருந்தேன். அக்கா வந்து பேசியவுடன் தான் நினைவு திரும்பியது.

ஒருவழியாக சாப்பாடு பந்தியிலிருந்தும் தப்பித்து வெளியே வந்தேன்.

“ஏன் தம்பூல பையை வாங்காம வந்துட்ட? தேங்கா போட்ருக்காங்க”
அம்மா அக்கறையாக வழியனுப்ப வந்தாங்கனு பாத்தேன்… இல்ல மொய்கணக்க எப்படியாவது சரி பண்ணனும் வந்துருக்காங்க

“அம்மா அசிங்கமா தாம்பூலம் எல்லாம் என்னால வாங்க முடியாது. நீ பொறுமையா வரும் போது வாங்கிட்டு வா”

“சரி. நீ என்ன சொன்னாலும் கேக்கவே மாட்ட”

வெளியே வந்து திரும்பும் போது மண்டபத்திற்கு வெளியில் அவள் நின்று கொண்டிருந்தாள்.

“என்னங்க இங்க நின்னூட்டு இருக்கீங்க?” கூச்சப்படாமல் பேசினேன். அவளை தவிர வேறு யார் நின்றிருந்தாலும் பேசியிருக்க மாட்டேன் என்றே தோன்றியது.

“இல்ல காலேஜ்க்கு நேரமாச்சு. ஆட்டோ கிடைக்குமானு பாத்துட்டு இருக்கேன்”

“நானும் அந்த வழியாத்தான் போறேன். வேணும்னா வாங்க ட்ராப் பண்ணிடறேன்”

“இல்லைங்க உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்”

“அதெல்லாம் ஒண்ணுமில்லைங்க… நான் அந்த வழியாத்தான் போறேன்”

“சரி எனக்கும் நேரமாச்சு. நீங்க அந்த டர்னிங்ல நிக்கறீங்களா? நான் வந்து ஏறிக்கிறேன். இங்க யாராவது பாத்தா தப்பா நினைப்பாங்க”

“யாருங்க தப்பா நினைக்கப் போறா. நீங்க வாங்க”

“இல்லைங்க வேணாம்” தயங்கினாள்.

“சரி நான் டர்னிங்ல வெயிட் பண்றேன்”
எல்லாமே இப்படித்தான் ஊர ஏமாத்தறாங்களா?

சரியாக மூன்று நிமிடத்திற்குள் வந்து வண்டியில் என் பின்னால் அமர்ந்தாள்.
இன்னைக்கு நல்ல நாள்தான்.

“ஆமாம்… உங்க பேர் கிருஷ்ணாதான?”

“ஆமாம்” இது தெரியாமத்தான் என் பின்னாடி வந்து உட்கார்ந்தாளா? கலிகாலம்.
“உங்க பேர் அருணாங்க?”

“அருண் இல்லைங்க… அருணா. வீட்ல பையன் யாரும் இல்லாததால என்ன அருண்னு கூப்பிட்டு சந்தோஷப்பட்டுக்கறாங்க. சரி நீங்க சாப்பிட்டீங்களா?”

“இல்லை. நீங்க?”

“நானும் சாப்பிடல. முதல் பந்தில உக்காந்தா அசிங்கமா இருக்குமேனு சாப்பிடாமலே வந்துட்டேன். எங்க காலேஜ் முன்னாடி ஒரு அண்ணபூர்ணா இருக்கு அங்க வேணும்னா ரெண்டு பேரும் சாப்பிடலாமா?”

“சாப்பிடலாமே” இன்னைக்கு உண்மையாலுமே அதிர்ஷ்ட நாள்தான்.

இருவரும் ஆளுக்கு ஒரு ரோஸ்ட் ஆர்டர் செய்தோம்.

“உங்களத்தான் நான் நினைவு தெரிஞ்ச நாளா தேடிக்கிட்டு இருக்கேன்”

என்னடா இப்படி சொல்றா? இவ எதுக்கு என்ன தேடனும். ஒரு வேளை “தித்திக்குதே”வா இருக்குமா? ச்ச இத கூட ஞாபகம் வெச்சிக்காம இருந்துட்டேனே. என்னை நானே நொந்து கொண்டேன்.

“என்னையா? ஏன்?”

“இங்க பாருங்க”
அவள் கையை நீட்டினால், அதில் நீட்டமாக ஒரு தழும்பு தெரிந்தது.

“என்னங்க எதோ தழும்பு மாதிரி இருக்கு”

“நல்லா கேளுங்க! நீங்க வெச்சது தான். நான் ஏதோ தெரியாம கிள்ளிட்டன்னு அடுப்புல இருந்து கொள்ளிக்கட்டை எடுத்து என் கைல வெச்சிட்டீங்களாம். எங்க அம்மா சொன்னாங்க”

இது கேக்கத்தான் என் கூட வண்டீல வந்தாளா? அக்கறையா சாப்பிட போகலாம்னு சொன்னது கூட இதுக்குத்தானா? நான் தான் அவசரப்பட்டுட்டனா?

“என்னங்க நான் என்ன தெரிஞ்சா பண்ணேன். ஏதோ தெரியாம கோபத்துல பண்ணது. எனக்கு சத்தியமா ஞாபகம் கூட இல்ல. அப்ப எனக்கு வயசு என்னா ஒரு ஆறு இல்லனா ஏழு இருக்குமாங்க? அப்ப பண்ண தப்புக்கு இப்ப வந்து கேட்டீங்கனா நான் என்ன பண்ண முடியும்? வேணும்னா சொல்லுங்க ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்கலாம்”
அதிகமா பேசின மாதிரி தோன்றியது.

“ஆமாம். இதுக்கு போய் ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணுவாங்களா? தெரியாம ஏதாவது சின்னதா பண்ணியிருந்தா பரவாயில்ல. தண்ணி காயறதுக்கு அடுப்பாங்கறைல வெச்சிருந்த விறகு கட்டய எடுத்துட்டு வந்து வெச்சிருக்கீங்க” கோபமாக பேசினாள். ஆனால் சமாதானமாகிவிடுவாள் என்று தோன்றியது.

“சரி அந்த சம்பவம்(?) உங்களுக்கு ஞாபகம் இருக்கா?”

“இல்ல. எங்க அம்மாதான் சொன்னாங்க”

“பாருங்க உங்களுக்கும் ஞாபகமில்ல. எனக்கும் ஞாபகமில்ல. அப்பறம் எதுக்கு நீங்க இவ்வளவு டென்ஷம் ஆகறிங்க?”

“ஆமாம். உங்களுக்கு என்ன? சின்ன வயசுல எல்லாம் என்ன கரிகால சோழன் மாதிரி இவ கரிக்கை சோழினு ஓட்டுவாங்க. அப்ப இருந்தே உங்க மேல எனக்கு கோபம்”

“கரிக்கை சோழி ரொம்ப நல்லா இருக்கே!”

“என்னது?” முறைத்தாள். ஆனால் செல்லமாக முறைப்பது போல்தான் எனக்கு தோன்றியது.

“இப்ப என்ன பண்ண சொல்றீங்க? வேணும்னா நீங்களும் என் கைய சுட்டுக்கோங்க. தெரிஞ்சே யாராவது இந்த மாதிரி பண்ணுவாங்களா? அதுவும் அழகான பொண்ணு கைய சுடறதுக்கு யாருக்காவது மனசு வருமா?” ஓரளவு வழியாமல் சொன்னேன்.

“ரொம்ப ஐஸ் வெக்காதீங்க. நான் உங்களுக்கு சூடு எல்லாம் வெக்க போறதில்ல. இந்த பில்ல பே பண்ணிட்டு, என்ன காலேஜ்ல இறக்கி விட்டுடுங்க”
சிரித்துக் கொண்டே சொன்னாள்.

“நான் தெரியாம பண்ணிருந்தாலும், ஐ ரியலி ஃபீல் சாரி. மன்னிச்சுடுங்க”

“பரவாயில்ல. உங்க மேல ரொம்ப கோவமா இருந்தேன். இப்ப எல்லாமே போயிடுச்சு”

ஒரு வழியாக அவளை காலேஜில் இறக்கிவிட்டு, வேலைக்கு சென்றேன். நாள் முழுதும் அவள் நியாபகமாகவே இருந்தது. வீட்டிற்கு வந்து சேரும் போது மணி 7 ஆகியிருந்தது.

“இவ எதுக்கு நம்ம வீட்டுக்கு வந்தா? அவ மாமியார் வீட்ல இருந்து துரத்திவிட்டுட்டாங்களா?”

“டேய்! என்ன யாரும் தொரத்தல.. உன்னத்தான் நம்ம வீட்ல இருந்து துரத்திடுவாங்கனு நினைக்கிறேன்” அக்கா சிரித்து கொண்டே சொன்னாள்.

“என்ன யாரும் துரத்த முடியாது. அம்மா சூடா ஒரு கப் காபி கொடேன்”

“ஒரு அஞ்சு நிமிஷம் இரு. கொண்டு வரேன்”

“ஆமாம். அக்கா இன்னைக்கு காலைல ஒரு ஆண்ட்டி நம்ம அம்மாட்ட பேசிக்கிட்டு இருந்தாங்களே, அவுங்கள உனக்கு ஞாபகம் இருக்கா?”

“இருக்கே! நம்ம அருண் அம்மா. ஏன் உனக்கு ஞாபகமில்லையா?”

“இல்ல. அவுங்க நமக்கு என்ன வேணும்?”

“நம்ம பக்கத்து வீட்ல இருந்தாங்க. இப்ப சொந்தக்காரவங்க ஆகிட்டாங்க!” நக்கலாக சிரித்து கொண்டே சொன்னாள். மனசுல பெரிய புத்திசாலினு நினைப்பு.

“கொஞ்சம் தெளிவா சொல்லு” கோபமாக கேட்டேன்

“எங்க மாமனாரோட தங்கச்சி விட்டுக்காரோரோட தம்பியோட சகல விட்டுக்காரரோட தங்கச்சியோட பொண்ணுட பையனைத்தான் அவுங்க கல்யாணம் பண்ணியிருக்காங்க” மறுபடியும் அதே நக்கல் சிரிப்பு.

“அவுங்க நமக்கு என்ன வேணும்” கோபத்தை அடக்கி கொண்டு கேட்டேன்

“அவங்க வீட்டுக்காரர் உனக்கு அண்ணன் முறை ஆகறாரு”

“என்னது? அண்ணனா? அவர் வயசு என்ன? என் வயசு என்ன? இப்ப உண்மைய சொல்லல உன் குழந்தைக்கு மொட்டை அடிக்கும் போது தலைல ப்ளேடு பொட்டுடுவன். ஆமாம்”

“ஏன்டீ அவனோட விளையாடற? அண்ணனும் இல்ல தம்பியுமில்ல. கொஞ்சம் தூரத்து சொந்தம்தான். அந்த பொண்ணு அருண பாத்தவுடனே எனக்கு புடிச்சு போச்சுடா. சரின்னு அவ அம்மாட்ட பேசி பாத்தேன் அவளும் சரி ஜாதகம் அனுப்பறேன் ஒத்து வந்துச்சுனா முடிச்சிக்கலாம்னு சொன்னா. உனக்கு புடிச்சியிருக்கா?”

அம்மா நீயே என் தெய்வம். உனக்கு கண்டிப்பாக கோவில் கட்டணும்.

“ஆமாம். அந்த பொண்ண இவன் “பே”னு பாத்தததான் கல்யாண மண்டபத்துல எல்லாரும் பாத்தாங்களே” அக்கா நக்கலாக சிரித்து கொண்டே சொன்னாள்.
இதுக்குத்தான் அப்ப இருந்து இப்படி நக்கலா சிரிச்சிக்கிட்டே இருந்தாளா?

“என்ன கேக்காம எப்படி நீங்க ஜாதகம் பத்தியெல்லாம் பேசலாம்” கொஞ்சம் பில்ட்-அப் கொடுத்தேன்.

“சரி. அவனுக்கு பிடிக்கலயாம். வேணாம்னு சொல்லிடுங்கம்மா” அக்கா ரொம்ப அக்கறையாக பேசினாள்.

“அதில்லமா… ஜாதகம் எல்லாம் மூட நம்பிக்கை. அது பாக்க வேணாம்னு சொன்னேன்” நான் வழிந்து கொண்டே சொன்னதை பார்த்து அம்மாவும், அக்காவும் சிரித்தனர்.

Source : http://vettipaiyal.blogspot.com/2006/09/blog-post_17.html

ஏப்ரல் 8, 2008

லொள்ளு

கோப்பு வகை: Cinema, Fun, லொள்ளு — வெட்டிப்பயல் @ 7:15 பிற்பகல்
Tags: , , , , , , , ,

நம்ம தமிழ்படத்துல வந்த இந்த டயலாக்குக்கு எல்லாம் இப்படி பதில் சொல்லியிருந்தா எப்படி இருக்கும்…

சிட்டிசன்:
கோர்ட் சீன்
அஜித்: அத்திப்பட்டினு ஒரு ஓர் இருந்ததே அது தெரியுமா உங்களுக்கு???
நீதிபதி: எருமைநாயகம்பட்டினு ஒரு ஊர் இருக்கே அது தெரியுமா உனக்கு???
அ: தெரியாதே…
நீ: அப்ப அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு…

காக்க காக்க:
ஜீவன்: அவளை தூக்கறன்டா… உனக்கு வலிக்கும்டா… நீ அழுவடா…
சூர்யா: அவளை தூக்கனா உனக்கு தாண்டா வலிக்கும்… ஏனா அவ 120 கிலோ

சந்திரமுகி:
பிரபு: என்ன கொடுமை சரவணன்…
தலைவர்: எது??? ஜோதிகாவ உனக்கு ஜோடியாப் போட்டதா?

ரமணா:
வி.கா: டமில்ல(Damil) எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு
மாணவர்: அது damil இல்ல கேப்டன் தமிழ்
வி.கா: அப்ப எனக்கு damilல பிடிக்காத ஒரே வார்த்தை “தமிழ்”

கௌரவம்:
சிவாஜி: கிளிக்கு ரெக்கை முளைச்சிடுச்சி… அதனால பறந்து போயிடுச்சு…
பத்மினி: ரெக்கை முளைச்சா பறந்து போகமா… பின்ன என்ன நீந்தியா போக முடியும்???

இப்பொழுதுக்கு இவ்வளவுதான் தோணுது… பிடித்திருந்தால் சொல்லுங்க அடுத்து யோசிக்கலாம் ;)

Source : http://vettipaiyal.blogspot.com/2006/08/blog-post_29.html

பெப்ரவரி 29, 2008

இன்றும்

மணி பதினொன்று. இன்றும் அலுவலகத்தில் இருந்து வர தாமதமாகிவிட்டது. அறையில் நண்பர்கள் யாரும் இல்லை. நைட் ஷோ சென்றிருப்பார்கள். படத்திற்கு போய் ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது.இன்று சீக்கிரம் வந்திருந்தால் நானும் சென்றிருக்கலாம். கிளம்பும் நேரத்தில் மேனேஜர் வந்து வேலை கொடுத்துவிட்டான். இன்று இரண்டாவது முறையாக அவனுடன் தகராறு. ஒன்று இந்த ப்ராஜெக்டில் இருந்து மாற வேண்டும் இல்லையென்றால் கம்பெனியை மாற்ற் வேண்டும். அப்போது தான் நிம்மதி. இதற்கு மேலும் இவனிடம் வேலை பார்க்க முடியாது.

அவனை மட்டும் குறை சொல்லி என்ன பயன். யாருக்கு தான் என் பேரில் அக்கறை இருக்கிறது. பெற்றவர்களுக்கே அக்கறை இல்லை. அவர்களுக்கு அக்கறை இருந்திருந்தால் நான் ஏன் கல்கத்தாவை விட்டு சென்னைக்கு வரப் போகிறேன். ஜனனியை மணக்க அவர்கள் சம்மதம் சொல்லியிருந்தால் இந்நேரம் என் வாழ்க்கை எப்படியெல்லாம் இருந்திருக்கும். அதைத் தாங்க முடியாமல் தானே கல்கத்தாவில் இருந்து இடமாற்றம் கேட்டு இப்போது சென்னையில் இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் இரண்டு பாக்கெட் சிகரெட்டில் என் சோகங்களை எல்லாம் மறந்துவிடத் துடிக்கிறேன்.

ஜனனி பத்தாம் வகுப்பில் என் பள்ளியில் வந்து சேர்ந்தாள். அவளும் தமிழ் தான். சொந்த ஊர் திருநெல்வேலி. அவள் அப்பாவிற்கு மாற்றலாகி அந்த வருடம் தான் கல்கத்தா வந்தனர். அப்போது முதல் கல்லூரி வரை ஒன்றாகவே படித்தோம். அந்த ஏழு ஆண்டுகளில் என் செயல்கள் முழுக்க முழுக்க ஜனனியை நோக்கித் தான் இருந்தது.

நான் கிதார் வாசிக்கக் கற்றுக் கொண்டதே அவளால் தான். ஒரு நாள் பள்ளியில் இருந்து இரயிலில் வீடு திரும்பும்போது எதிர் சீட்டில் ஒருவன் கிடார் வைத்திருந்தான். ஜனனி எனக்கு கிதார் வாசிக்கத் தெரியுமா எனக் கேட்டாள். அவளுக்காகவே அடுத்த நாளே கிடார் வகுப்பில் சேர்ந்து கிடார் கற்றுக்கொண்டேன்.

அதே போல் நான் கிடார் வாசிப்பதை நிறுத்தியதற்குக் காரணமும் அவள் தான். கல்லூரியில் மூன்றாம் வருடம் படித்துக் கொண்டிருந்த போது ஒரு கலை நிகழ்ச்சிக்காக மேடையில் வாசித்தேன். அன்று மாலை ஏதோ காரணத்துக்காக எங்களுக்குள் சண்டை வந்தது. அந்த ஆறு வருடங்களில் எங்களிடையே விழுந்த முதல் விரிசல். அன்று முடிவு செய்தேன். இனி கிடார் வாசிக்கப் போவதில்லை என. இப்படித் தான் பல நேரங்களில் காரணமில்லாத பைத்தியக்காரத் தனமான முடிவுகளை எடுக்கின்றோம்.

என் மாமா BARC-இல் வேலை செய்துகொண்டிருந்தார். அவர்தான் எனக்கு ரோல் மாடல். ஜனனியை மணக்க என் அப்பா எதிர்ப்பு தெரிவித்தாலும் மாமா பேசி எப்படியாவது எங்கள் திருமணத்தை நடத்தி வைத்துவிடுவார் என்ற நம்பிக்கையில் இருந்தேன். ஆனால் நான் இறுதி வருடம் படித்தபோது ‘ஹார்ட் அட்டாக்’கில் மாமா இறந்துபோனார். அதுதான் வாழ்க்கையில் நான் பட்ட முதல் அடி. அவர் இருந்திருந்தால் நான் ஜனனியைப் பிரிந்திருக்கத் தேவையில்லை.

அடுத்த ஆறு மாதத்தில் பாட்டியும் இறந்துபோனாள். பாட்டி இறந்த இரண்டு மாதங்களில் அப்பாவிடம் எங்கள் காதலைப் பற்றி சொன்னபோது அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஜாதி, மொழி எல்லாம் ஒன்று தான். ஆனாலும் அவர் சம்மதிக்க மறுத்துவிட்டார். பெற்ற மகனின் வாழ்க்கையில் அக்கறை இருந்திருந்தால் அப்படி செய்திருக்க மாட்டார்.

எல்லாம் சுயநலவாதிகள் தானே. அவருக்கு விருப்பமான படிப்பு, அவருக்கு விருப்பமான வேலை, இப்போது அவருக்கு விருப்பமான மருமகள் வேண்டும். எல்லாம் அவர் விருப்பம் போல் அமைய வேண்டும். ஜனனியின் வீட்டிலும் எங்கள் காதலை ஒத்துக்கொள்ளவில்லை. என்னை விட அவள் அதை எளிதாக்த் தாங்கிக் கொண்டாள்.

இதுவரையில் என் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான தருணங்களும் சோகமான தருணங்களும் ஜனனியால் வந்தவையே.

ஒரு முறை பள்ளியில் இருந்து வீடு திரும்பும்போது மழை வலுக்க நான் மூடியிருந்த ஒரு கடையின் வாசலில் ஒதுங்கினேன். சிறிது நேரத்தில் ஜனனி குடையுடன் வந்து கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் நின்று தன் குடைக்குள் வருமாறு அழைத்தாள். நான் மறுக்க “என்னுடன் குடையில் நனையாமல் வா. இல்லையென்றால் மழை நின்றபின் இருவரும் போவோம்” என அவளும் அந்த கூரையின் கீழ் வந்து நின்றுவிட்டாள். அவளுடன் செல்ல உள்ளுக்குள் ஆசை இருந்தாலும் ஏதோ ஒரு தயக்கத்தில் மழை நிற்கும் வரை அங்கேயே நின்று பேசிவிட்டு கிளம்பினோம். இது போல் எத்தனை நினைவுகள்.

கல்லூரி படிப்பு முடிந்து நான் வேலைக்குச் சேர்ந்த அதே தினத்தில் ஜனனிக்கு திருமணம். என்னையும் அழைத்தாள். திருமணத்திற்கு ஒரு வாரம் முன் போன் செய்து இரண்டு மணி நேரம் அழுதாள். திருமணத்திற்கு நான் செல்லவில்லை. அந்த அளவு என் மனதில் வலுவில்லை.

காலம் தான் எவ்வளவு வேகமாக செல்கிறது. அவளுக்குத் திருமணம் நடந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது லக்னோவில் இருக்கிறாள். அவள் திருமணத்திற்குப் பின் அவளிடம் பேசவேயில்லை. ஆறு மாதங்களுக்கு முன் அவளாக எப்படியோ என் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து அழைத்தாள். அப்போதும் என்னால் அவளிடம் பேச முடியவில்லை.அவள் நலனை விசாரித்துவிட்டு இனி எனக்கு போன் செய்யவேண்டாம் எனக் கூறிவிட்டு வைத்துவிட்டேன். அன்று இரவு அவள் திருமணத்தின் போது அழுததை விட அதிகமாக அழுதேன்.

அவள் மகனுக்கு இரண்டு வயதாகிவிட்டதாம். அவள் தோழி கீதா சொன்னாள். ஒருமுறை சென்று பார்த்துவிட்டு வரவேண்டுமென நினைக்கத் தான் முடிகிறதே தவிர கிளம்புவதற்குத் திராணியில்லை. அவள் மகனுக்கு ‘கார்த்திக்’ எனப் பெயர் வைத்திருக்கிறாளாம். சினிமாவில் மட்டும் தான் முன்னாள் காதலனின் பெயரை வைப்பார்கள் போல.

என் அப்பா அன்றே என் காதலுக்குச் சம்மதம் சொல்லியிருந்தால் இப்படி நடுஇரவில் தூக்கம் வராமல் புரண்டுகொண்டிருக்க மாட்டேன். நம் விருப்பத்தை என்றைக்கு மதித்திருக்கிறார்கள். அவர் மேல் எவ்வளவு வெறுப்பிருந்தாலும் அவரை மீறவும் மனம் வரவில்லை. கடைசி வரை நம் மேல் அக்கறை கொண்டு நமக்கு நல்லது செய்பவர்கள் யாருமில்லை.

இப்போது வேறொரு பெண்ணைக் காதலித்தால் ஒத்துக்கொள்ளவா போகிறார். அதற்கும் அவரிடம் சண்டை போடத்தான் வேண்டும். நானும் ஜனனியை மறக்க வேண்டும். எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவளுடன் ஒப்பிட்டுப் பார்க்கவே தோன்றுகிறது. முதலில் அதை மாற்ற வேண்டும்.

மணி ஒன்றாகிவிட்டது. இன்னும் நண்பர்கள் படம் முடித்து வீடு திரும்பவில்லை. விஜய் பைக்கிற்கு ஆர்.சி புக் இல்லை.

நாளை பத்து மணிக்கு மீட்டிங் இருக்கிறது. அதற்கு முன் மேனேஜரிடம் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் அளிக்க வேண்டும். இந்த ப்ராஜெக்டை திட்டமிட்டபடி இந்த மாதத்துக்குள் முடித்துவிட்டால் நல்லது. அவனிடம் நல்ல பெயர் கிடைக்கும், ரேட்டிங்கில் உதவும்.

தூக்க மாத்திரை எங்கே வைத்தேன்?

மூலம்

பெப்ரவரி 27, 2008

நேயர் விருப்பம்

அடிக்கிற வெயிலிலே காஞ்சு கருகி போயிருவோம் போலயிருக்கே’ன்னு புலம்பிக்கிட்டே தாராபுரத்து பஸ்ஸடாண்ட்’ல் நின்றுக் கொண்டுருந்தான் தனபால். தூரத்தில் யாரோ தெரிந்தவன் போல ஏதோவொரு உருவம் அங்குமிங்கும் அலைவதை பார்த்த தனபாலுக்கு யாரு’ன்னு சட்டென்னு உரைக்கவில்லை, வயதுகளின் பெருக்கத்தில் மூக்கு மேலிருக்கும் அமர்வினை எடுத்துவராத கஷ்டத்தை பஸ்ஸ்டாண்டில் நின்று பத்தடிக்கு முன்னால் நிற்கும் பஸ்ஸில் எழுத்தை படிக்க பட்ட பாட்டை நினைத்து பொறுமி கொண்டிருந்தான். அதே உருவம் தான் நிற்கும் பக்கத்தை நோக்கியே வர உற்றுக்கவனிக்க ஆரம்பித்தான். வெகுவான ஆச்சரியத்தோடு அவனை அப்பிடியே கத்திக்கொண்டே போயி கட்டிக்கொள்ளும் அளவுக்கு பாசம் உந்த அது அவந்தானா பக்கத்தில் வந்ததும் கன்பார்ம் செய்துவிட்டு செய்யலாமென வெகு உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தான்.

“அட தனா கண்னு, நீதானா அது தூரத்திலிருந்து பார்க்கிறப்போ யாரோ மாதிரி தெரிஞ்சயேப்பா! பாரு கும்பிடப்போன சாமியே நேரா வந்த கணக்கா இங்கன நிக்கிறே, ஒன்னப்பார்க்கதான் தாரப்புரம் வந்தேன்.”

இவனா இன்னும் உசுரோடதான் இருக்கானா? தான் பார்க்கிறது கனவா நிஜமான்னு வெகுவான ஆச்சரியத்திலே அவனையே பார்த்துக்கொண்டுருந்தான் தனபால்.

“என்னா இப்பிடி பார்க்கிறே? இன்னும் நான் உசுரோட இருக்கேன்னு பார்க்கிறீயா?”

“சே ச்சே, அப்பிடி இல்லடா நாகு, நாமே சந்திச்சே பத்து வருசத்துக்கு மேலே ஆகிப்போச்சே, அதுதான் கொஞ்சம் குழப்பமா இருந்தேன்.”

“நான் வேலைக்குன்னு சவுதி போயி பத்து வருசத்துக்கு மேலே ஆச்சு, ரெண்டு வருசத்துக்கு முன்னாடி அம்மா செத்தப்போ இங்க வந்தேன், அதுக்கப்புறம் இப்போதான் இங்கயே வர்றேன்.”

“என்னாது அம்மா இறந்துட்டாங்களா? அதைக்கூட சொல்ல மாட்டியா நீயி? என்னம்மோ போடா, அந்த பிரச்சினை ஆனதுக்கபுறம் நீ சொல்லாமே கொள்ளாமே ஊரை விட்டு போனதும் எனக்கு அவ்வளவு கோவம் வந்துச்சு, நீயும் நானும் நாலு வருசத்துக்கு மேல ஒன்னா இருந்தும் அந்த பிரச்சினைக்காக அப்பிடியா ஓடிப்போறது?”

“சரி நான் முடிஞ்சு போன பிரச்சினையே பத்தி பேச வரலை, ஒன்னய பார்த்து போகலாமின்னு கோயம்புத்தூரிலே இருந்து இங்க வந்துருக்கேன், பக்கத்திலே அழகா ஒரு குட்டிப்பொண்ணு நிக்கிறாங்களே? இவங்க யாரு?”

“ஹிம், இவங்கதான் என்னோட பொண்ணு, மூணாவது படிக்கிறாங்க, பேரு சவுந்தர்யா, இன்னிக்கு சனிக்கிழமை’கிறதுனாலே அம்மணிக்கு லீவு. கோயம்புத்தூர் போறேன்னு சொன்னதும் என்னையும் கூட்டிட்டு போங்கன்னு வந்தாங்க”

“அப்பிடியா இனிமேதான் போகப்போறியா?”

“இல்ல இல்ல, போயிட்டு வந்தாச்சு, இப்போதான் பஸ்ஸிலே இறங்கி வந்து நின்னுட்டு இருக்கேன், நீ அடுத்த பஸ்ஸிலே இங்க வந்து இறங்கிறே”

“சரி இங்கயே நிக்க வைச்சு பேசிட்டு இருக்கே? வீட்டுக்கெல்லாம் கூட்டிட்டு போகமாட்டியா?”

மெல்லமாய் சிரிப்பை உதிர்த்து விட்டு பஸ்ஸ்டாண்ட் வெளியே வாகனகாப்பகத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தனர் மூவரும். வரும் வழியில் தற்போது சொந்தமாக எல்க்ட்ரிக்கல் கடை வைத்திருப்பதாகவும் அதற்குண்டான ஸ்டாக் எடுக்கதான் கோவை வந்ததாகவும் நாகுவிடம் சொல்லிக்கொண்டே வந்தான் தனபால்.

“விஜி, இவந்தான் நாகராஜ், அடிக்கடி சொல்லுவேனே? அவந்தான் இவன்”ன்னு தன்னுடய மனைவியிடம் நாகராஜனை அறிமுகப்படுத்தினான்.

“நானும் இவனும்தான் ஒன்னா கோயம்புத்தூர் மில்’லே எலக்ட்ரிசியனா வேலை பார்த்தோம். கொஞ்சநாளிலே எனக்கு சவூதி’லே வேலை கெடைச்சிருச்சுன்னு அங்க போயிட்டேன்”

“ஹிம் ஒங்களை பத்தி சொல்லியிருக்காங்க, நீங்களும் இவரும் ஒன்னா திண்டுக்கல் பாலிடெக்னிக்’லே படிச்சி முடிச்சு கோயம்புத்தூர் வந்து வேலை பார்த்தது, தனியா வீடு எடுத்து தங்கினது’னு எல்லாமே சொல்லியிருக்காங்க”

தனபால் மனைவி இதை சொல்லிமுடித்ததும் சற்றே சந்தேகத்திடனே நாகராஜன் அவனை உற்று நோக்க ஆரம்பித்தான். சமையல் வேலையாய் அவள் உள்ளே போக தன்னுடைய சந்தேகத்தை கேட்டுறலாமின்னு என பேச ஆரம்பித்தான்.

“அடேய் தனா எல்லாத்தையும் சொல்லிட்டியா?”

“எல்லாமே சொல்லிட்டேன், ஆனா அந்த பிரச்சினையே மட்டும் சொல்லலை!”

“ஹிம், எப்பிடிடா இருக்கா அவ? நல்லாயிருக்காளா? சந்தோசமா இருக்கா இல்ல?”

“ஒருதடவை கோயம்புத்தூரிலே வேலை விசயமா போனப்போ அவ காரிலே போறத பார்த்தேன், என்னையே அவளும் பார்த்துட்டா போலே, கொஞ்சதூரம் போன காரை கூட திரும்ப வர்ற வைச்சி என்கிட்டே பேசிட்டு போனா, நல்லாயிருக்காளாம், பீளமேடு பக்கத்திலேதான் வீடு வந்துட்டு போங்கன்னு கூப்பிட்டா என்னாலேதான் போகமுடியல”

“ஓ, நான் அவளை பார்க்கலாமாடா?”

“இதேதான் அவளும் என்கிட்டே கேட்டா? நாகு எப்பிடியிருக்காங்க? கல்யாணம் ஆகிருச்சான்னு கேட்டா? அட நானே கேட்கமறந்து போயிட்டேன், கல்யாணம் ஆகிருச்சாடா ஒனக்கு? எங்க வீட்டை சவூதி’லே செட் பண்ணிட்டியா?”

“இல்லய்யா, அம்மாவும் எட்டு வருசமா என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி சொல்லி அலுத்து போயி செத்தே போயிட்டாங்க, நான் இப்பிடி பண்ணுறேன்னு அக்காவும் என்கிட்டே பேச்சை நிப்பாட்டி வருசத்துக்கு மேலா ஆகிப்போச்சு, ஒட்டு சொந்தமே என்னை புரிஞ்சுக்கலை, நான் என்ன பண்ணுறது?”

“ஹிம் என்னதான் பெரிய வருத்தமிருந்தாலும் நாப்பது வயசு வரைக்கும் கலியாணம் பண்ணாமலே’வா இருக்கிறது?”

“என்னாடா பண்ணச்சொல்லுறே? மறக்க முயற்சி பண்ணாலும் முடிய மாட்டங்கிதே? எங்க விசயம் அவங்க வீட்டுக்கு தெரிஞ்சு அவ அப்பா ரோட்டிலே வைச்சி என்னை தாறுமாறா திட்டுனது? நம்ம வேலை பார்த்த மில்’க்கே வந்து அவங்க அண்ணனுங்க அசிங்கமான வார்த்தைகள் எல்லாம் பேசி சண்டை போட்டும் அவளை மட்டும் என்னாலே மறக்கமுடியலை’யேடா!”ன்னு கண்ணோரத்தில் எட்டிப்பார்த்த ஈரத்தை மெல்லமாய் துடைத்து கொண்டான்.

“நாகு எனக்கு புரியுதுடா,, அதுக்காக நீ கல்யாணமே பண்ணிக்காமே இருக்கிறது நல்லாவா இருக்கு? இப்போ உனக்குன்னு இருந்த அம்மாவும் இல்லை, அக்காவும் பேசுறது இல்லன்னு சொல்லுறே? அப்போ வர்றப்போற காலங்களிலே ஒனக்குன்னு யாருடா இருக்கா?”

“எல்லாம் விதி படியே நடக்கட்டுமின்னு நானும் அதுப்படியே போயிட்டு இருக்கேன்”

“அப்பா அப்பா, நான் கேட்ட பாட்டை சூரியன் FM’லே போடுறாங்கப்பா’ன்னு சந்தோசமாக ஓடி வந்தாள் தனபால் மகள்

“என்னாடா இன்னுமா ரேடியா’லே நேயர்விருப்பம் போடுறாங்க”ன்னு ஆச்சரியத்தோடு கேட்டான் நாகு.

“ஆமாம், இப்போ FM ரேடியோ வந்ததுக்கபுறம் அந்த விருப்பம் இந்த விருப்பமின்னு போனிலே பேசி தள்ளுறாங்க! நம்ம காலத்திலே போஸ்ட் கார்ட்’லெ எழுதி போட்டு தினமும் சாயுங்காலம் இன்னிக்காவது நம்ம பேரை சொல்லி பாட்டு போட்டுருவாங்களான்னு காத்து கெடப்போமே”

“நீ இதை சொன்னதும் தேவி நினைப்புதாண்டா வருது. தினமும் பத்து கார்டு அனுப்புவாளே? ஒருதடவை என் பெயரையும் அவ பேரையும் சேர்த்து எழுதி காதலான தேவி, உன்னை சுற்றும் ஆவி பாட்டு வேணுமின்னு எழுதி போட்டிருக்கேன்னு சொன்னா, அது வந்துச்சான்னுகூட தெரியல.”

“ஆமாம் இந்த நேயர் விருப்பம் கேட்கிறதுலே அவதானே தீவிரமா இருப்பான்னு சொல்லுவியே? நாமே தங்கியிருந்த வீட்டுக்கு பக்கத்திலே இருந்தாலும் என்கிட்டே ஒருநாளும் பேசினது இல்லை. எப்பாவது நீயும் நானும் வெளியே போயிட்டு வந்தாலும் என்னை பார்த்தாலே அமைதியா போயிருவாளே! எப்பிடிடா லவ்’லாம் பண்ணீங்க, அதுவும் பாட்டெல்லாம் நேயர்விருப்பத்திலே போடுற அளவுக்கு பேசினீங்க?”

“அதெல்லாம் எப்பிடியோ பேசுவோம்.அவளுக்கு இளையராஜா’ன்னா ரொம்ப பிடிக்கும்,அதுவும் கார்த்திக் நடிக்கிற படத்துக்கு இளையராஜா மீயூசிக்’ன்னா ரொம்பவே விரும்பி கேட்பேன்னு சொல்லுவா! பனிவிழும் மலர்வனம் ரேடியோ’லே நேயர்விருப்பத்திலே வந்துச்சுன்னா அதிலே இவ பேரு கண்டிப்பா இருக்கும்.”

“ஹிம் அவ சொன்னாதானே நீயி மூக்குக்கு கீழே கொஞ்சமா மீசைய சேவ் பண்ணிட்டு திரிஞ்சே, இப்போ என்னாடா’ன்னு காட்டான் மாதிரி கட்டு மீசை வைச்சிட்டு திரியிறே. “

“ஆமாம் அவளுக்கு கார்த்திக் பிடிக்கிறதுக்காக அப்பிடி இருந்தேன். இப்போதான் நான் தேவதாஸ் ஆகிட்டேனே? ஆனா சரியா ரோமக்கட்டு இல்லாதுனாலே தாடிதான் சரியா வரமாட்டேங்கிது”

“இன்னும் அந்த நக்கல் பண்ணுற பேச்சை விடலடா”ன்னு பேச்சுக்கு சொன்னாலும் அவனுடைய கண்கள் பனிக்க எத்தனிக்கும் தருணத்தையும் கவனித்தான் தனபால்.

“தனா நான் இங்க வந்ததே ஒன்னய பார்க்கிறதுக்கும் முக்கியமா அவளை பார்த்து விசாரிக்கிறதுக்கும் தான் வந்தேன். அவ வீட்டு அட்ரஸ் தர்றியா? நான் ஒருக்கா அவளை பார்த்துட்டு வந்திறேன்.”

“அட்ராஸ்தானே தர்றேன். அதுக்கு முன்னாடி நான் இந்த எட்டு ஒன்பது வருசமா அனுபிவிக்கிற கொடுமையே நீயும் அனுபிவிக்கனும்”

“என்னடா அது”

“அட ஒன்னுமில்லடா, அம்மணி சாப்பிட்க்கூப்பிடுறாங்க, வா போயி சாப்பிடலாம்.”

“சரி அப்போ நான் அவளை பார்க்கிறதுக்கு ஒனக்கு ஒன்னும் ஆட்சோபணை இல்லைலே?”

“ஹிம் அதெல்லாம் இல்லை, நீ தாரளமா போயி பார்த்துட்டு வா, இப்பவே சாப்பிட்டு போயிட்டு கூட வா, நான் சாயுங்காலமா சென்னை போறேன், நீயும் என்கூட வந்தேன்னா எனக்கு கொஞ்சம் துணையா இருக்கும். ஒரு பல்ப் கம்பெனிகாரன் டீலர்ஷிப் தாரேன்னு சொல்லியிருக்கான், அவனை போயி பார்த்து பேசனும்.”

மதிய உணவிற்கு பிறகு தனபாலிடமிருந்து அட்ரஸ் வாங்கிகொண்டு திரும்ப வர்றேன்னு கிளம்பி போனான் நாகராஜன். தேவியின் வீட்டை போளூர்’ல் கண்டுபிடிப்பதற்கு பெரிதாக எல்லாம் சிரமமபடவில்லை அவன். வீடு என சொல்லுவதை விட பெரிய பங்களா போலே இருந்தது, தயங்கி தயங்கி அங்கே போயி வெளியே நின்ற கூர்கா’விடம் தேவியை பார்க்க வேண்டி அவளுடைய அனுமதிக்கு பிறகு வீட்டுக்குள் சென்றான் நாகராஜன். பத்து வருடத்துக்கு முன்னர் பார்த்த அதேமாதிரியே இருந்தாள் தேவி. இன்னமும் படிய வாரிய கூந்தலும், மல்லிகை பூவும், மேல் நெத்தியில் சந்தனகீற்றும், இரு புருவங்களுக்கு சற்றே மேலே விரல் நுனி அளவு குங்குமமும், இப்பொழுது சற்று புதிதாக உச்சி நெற்றியிலும் குங்குமமும் வெகுபாந்தமாய் இருந்தாள். பேசுவதற்கு எந்த வார்த்தை கொண்டு ஆரம்பிப்பது’னு இருவரும் தடுமாற இருவர் வாயிலும் நல்லாயிருக்கியான்னு வந்து உதிர்த்தது.

“நான் நல்லா இருக்கேன் தேவி… நீ எப்பிடியிருக்கே? ஒன்னோட புருசன் என்ன பண்ணுறாரு?”

“எனக்கென்னா நான் மகாராணியாட்டாம் இருக்கேன், அவரு இங்க வாட்டர் பம்பு மேன்பாக்சரிங்க் பண்ணுற பிஸினஸ் பண்ணிட்டு இருக்காரு. நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?”

“நான் சவூதி’லே ஒரு கம்பெனியிலே எலக்ட்ரிகல் டிபார்ட்மெண்ட்’லே இருக்கேன். லீவு’லே இங்க வந்தேன். வந்த இடத்திலே தனா’வே பார்க்கலாமின்னு வந்தேன். அவந்தான் ஒன்னோட அட்ரஸ் கொடுத்தான், அப்பிடியே பார்த்துட்டு போலாமின்னு வந்தேன்.”ன்னு கிட்டத்தட்ட இரண்டுமணி நேரமாய் மனதிற்குள் என்ன பேசவேண்டுமென நினைத்தை அப்பிடியே அவளிடம் ஒப்பித்தான். எந்தவொரு சூழ்நிலையிலும் கண்கள் கலங்கிட கூடாது. வார்த்தைகள் வர கஷ்டப்படும் அளவுக்கு போயிறக்கூடாது’ன்னு உறுதியாக இருந்தான்.

“நீங்க முன்னப்பார்த்த மாதிரியே அப்பிடியே இருக்கீங்க, மீசைதான் பெருசா வைச்சிருக்கீங்க. இப்போ வந்த அம்மணிக்கு இப்பிடியிருக்கிறதுதான் பிடிச்சிருக்கா என்னா’ன்னு கேட்டு வெகுளியா சிரித்தாள் தேவி. ஆனால் இவனுக்குதான் கஷ்டமாக இருந்தது. இவனது முகம் போன போக்கை கவனித்த அவள் பேச்சை மாற்ற முற்பட்டாள்.

“இப்போல்லாம் கூட நான் நேயர் விருப்பத்துக்கு லெட்டர் அனுப்பிட்டு தான் இருக்கேன். முன்னாடி ஒரேயொரு கோவை ரேடியாதான், ஆனா இப்போ டிவி,FM ரேடியோ’ன்னு எல்லாத்திலேயும் இது போடுறாங்க இல்லே, எல்லாத்திலையும் லெட்டர் அனுப்பிட்டுதான் இருக்கேன்’ன்னு சொல்லி சிரிக்க ஆரம்பித்தாள். இன்னமும் அவளிடம் நிறையவே பேசவேண்டுமென நினைத்தாலும் நேரம் நெருங்க ஆரம்பித்ததும் தனா என்னை சென்னைக்குகூட வர சொல்லி கூப்பிட்டு இருந்தான். நான் கிளம்ப வேண்டியதா இருக்கு’னு சொல்லி அந்த இடத்தை விட்டு கிளம்பினான் நாகு.

கோயம்புத்தூர் பஸ்ஸ்டாண்ட்’லில் இருந்து சென்னை போகும் பஸ்க்கு அருகில் வெயிட் பண்ணுவதாக தனபால்’க்கு போன் செய்தான். இரவு பஸ் பயணத்திடனுடயே “நாகு தேவியை பார்த்து பேசினியா என்னா சொன்னா?’ன்னு கேட்ட தனபாலை கலங்கிய கண்களோடு பார்த்தான் நாகு.

“ஹிம் நல்லா இருக்காடா! அவ்வளவு பெரிய வீட்டிலே மகாராணியாட்டாம் இருக்கேன், சந்தோசமா இருக்கேன்னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லிட்டே இருந்தா, இன்னமும் நேயர் விருப்பத்துக்கெல்லாம் லெட்டர் போடுறதா சொல்லிட்டு இருந்தா”

“அப்புறம் என்னாடா, நீ எதுக்கு அப்செட் மூடு’லே இருக்கே? இன்னமும் அவ நேயர்விருப்பத்திலே கேட்கிற பாட்டெல்லாம் ஒன்னாலே அவ பெயரோட கேட்கமுடியலன்னு வருத்ததிலே இருக்கியா? இப்பவே சொல்லு, இப்பவே நைட்’லே கூட நேயர் விருப்பம் வருது அதிலே அவ பெயரை சொல்லி பாட்டு போட சொல்லிருவோம்.”

“உனக்கு என்ன பதில் சொல்லுறதுன்னே தெரியல’டான்னு குலுங்கி குலுங்கி ஆரம்பித்தான் நாகு.

“டேய் டேய் எதுக்கு அழுவுறே? இது பஸ்’டா, எல்லாரும் ஒருமாதிரியா பார்க்குறாங்க, என்னா ஆச்சு’னு சொல்லு”

“தனா தனா, கிளம்புறப்போ என்னை விட்டு தூரமா நின்னுட்டு அவ்வளவு நேரமா சிரிச்சிட்டு இருந்தவா அழவே கூடாது’ன்னு அவளோட உணர்ச்சிய கட்டுப்படித்திக்கிட்டு…” சொல்லி விசும்ப ஆரம்பித்தான் நாகு.

“தேவி அப்பிடி என்னாதான் சொன்னா?”

“ம்ம்..ம்ம்…ஒங்க பேரு வைச்சி கூப்பிட எனக்கொரு புள்ள இல்லாத அபாக்கியசாலியா இருக்கேன்னு சொல்லி கண்ணுலே தண்ணி வந்து அதை அடக்கமுடியாமே உள்ளே ஓடிட்டா”ன்னு சொல்லி இன்னும் சத்தமாக அழ ஆரம்பித்தான் நாகு.

இந்த மனநிலையிலிருக்கும் நாகுவை என்ன சொல்லி தேற்றுவதுன்னு வெகுவான குழப்பதின் உச்சியில் அமைதியானான் தனபால்.பஸ்ஸில் இரவு நேரத்தில் கசியும் பாடலில் காதலான தேவி, உன்னை சுற்றும் ஆவி ஒலிக்க ஆரம்பித்தது.

டிசம்பர் 22, 2007

செப்புத் தாழ்ப்பாள்

கால்தடங்களை அழித்து செல்லும் கடல் அலையென,தன் மனதில் பதிந்த தடங்களை அழித்து செல்லதொரு வல்ல பெரும் ஆழி பேரலைய எதிர்நோக்கி அக்கணமே இந்த குப்பையுடலில் உயிர் என்று ஒன்று இருந்தால் அது தெறித்துவிட்டொழிய வேண்டுமென மனதோடு அந்த புளியமரத்தை வெறித்து பார்த்து கொண்டுருந்தான் வேலு. பெண்ணொருத்தி ஆணின் மீது செலுத்தும் அன்பு எப்பிடியிருக்குமென முழுவதையும் உணர்த்தவனாய், பரந்து விரிந்த மலர்ந்த அழகுமலரென்றின் நடுநாயகமாக நின்று தன்னை சுற்றி அந்த மலரின் இதழ்களெனும் வெளிவட்டம் என்ற காதல் வளர்ந்ததை நினைத்து பார்க்கல்லான்.

“ஏண்டியவளே கனகுமணி? இங்கன பாரு அஞ்சு ரூவா’வே கிழே போட்டுட்டு போயிட்டு இருக்கே?”

“அடியாத்தி! என்னோட செவத்த மச்சானே! ஒன்னோட கரிசனம் எனக்கு ஒன்னும் வேணாம்ய்யா! நீ என்னத்துக்கு காசை கிழே போட்டு வைச்சிருக்கேன்னு எனக்கு நல்லாவே தெரியும், எனக்கு ஒன்னும் தேவையில்ல அந்த காசு.”

“சிறுக்கி, என்னத்துக்கு போட்டு வைச்சிருக்கோம் நாங்க! நீ முன்ன போறியே? காசு இங்கன கிடக்கே, அப்போ அது ஒன்னோடதுதான் நினைச்சி கூப்பிட்டேன்.”

“பொய் கோழி மாமா, எனக்கு எதுக்குன்னு நல்லாவே தெரியும், நான் பாவாடை சட்டையிலே வந்திருக்கேன், காசு எடுக்க நான் குனிய நீ என்னத்த பாக்க அலையுறேன்னு நல்லாவே தெரியும், செவனேன்னு கெட’மாமேய்.”

“ஹிம் நீ வெசயம் தெரிஞ்ச வெச காரிடி! பட்டப்படிப்பு படிக்க போறேன்னு தெனக்கும் சுடிதார் மாட்டிகிட்டு மருத போறே? நானும் அதை படிச்சு கிழிச்சு ஒன்னத்துக்கும் வக்கிலாமே பொட்டிக்கடை வைச்சிட்டு இருக்கேன். நீ படிச்சு என்னத்த கிழிக்க போறே? கழுதவயசு ஆகிப்போச்சிலே,இங்கன இருக்கிறப்பயாவது தாவணி கட்டவேண்டியது தானே?”

” ஒங்கடைக்கு பட்டதாரி கடன் வாங்கினமாதிரி ஒன்னோட கடைக்கு எதிர்க்க நானும் போட்டிகடை ஆரம்பிப்பேன். நீ என்ன எனக்கு தாலி கட்டப்போறவனா? ஒனக்கு பிடிச்சமாதிரி ஒடை உடுத்திட்டு நான் வர்றதுக்கு?”

“என்னய தவிர வேறயாருடி ஒன்னை கட்டப்போறது?”

“ஆத்தி ஒங்கப்பன் வெசப்பல்லுகாரனை மிஞ்சி நீ என்னத்தயாவது செஞ்சுட போறியா என்ன? அந்த பெருசு வெவசாயம் பண்ணுறேன்னு நிலத்தை உழுதது போக அடுத்தவங்ககிட்டே பேசுறேன்னு உசுரை வாங்கிட்டு திரியுது!”

“அப்போ எங்கப்பனை போட்டு தள்ளிறலாமா? சொல்லு எம்மாமன் மவளுக்காக அதைக்கூட செஞ்சுப்பிடலாம்”

“ஆத்தி எனக்கெதுக்கு கொலைகாரபுருஷன்! வேணுமின்னா அது நாக்கை மட்டும் துண்டிச்சிரு அது போதும்”

“ஏண்டி, ஒன்னை கட்டிக்க எங்கப்பனை நான் கொல்லனும்,இல்லன்னா அது நாக்கை வெட்டனுமா? அப்பிடியொன்னும் எனக்கு நீ தேவையில்ல போடி, எனக்கு அம்புட்டு பெரியமதிப்பு பிடிச்ச கெரக்கி இல்ல நீயி”

“அய்யோ, வேணாமின்னுதான் நான் எந்த பக்கம் போனாலும் பின்னாடியே வர்றியாக்கும், ஒங்கப்பன் எங்க வீட்டோட பேச்சை நிப்பாட்டி இருவது வருசமாகியும் நீ மட்டும் எங்க வீட்டுக்கு ஈ’ன்னு பல்லுளிச்சுட்டு போறதுக்கு என்னத்தய்யா காரணம்?”

“ஆமா… ஊருக்குள்ளே பொட்டைப்புள்ளய கலியாணம் பண்ணிக்க ஆளு இல்லாட்டியும் நான் அதை செஞ்சு தியாகி வாழறதுக்கு தயாரா இருக்கேன்னு ஒங்கப்பன்’கிட்டே சூசகமா சொல்லுறதுதான்”

“ஆமாம் ஒன்னோட தியாகத்தை நினைச்சி நம்ம திருமங்கலம் ஊரு மத்தியிலே சிலை வைக்கலாமின்னு ஊருக்காரங்க எல்லாரும் கூடி பேசிட்டு கெடந்தாங்க…”

“ஒன்னை மாதிரி தொணத்து பிடிச்சவளை கட்டுனா எனக்கு தியாகி பட்டந்தாண்டி கிடைக்கும் அப்புறம் செலையும் வைக்கதான் செய்யுவாங்க. சீக்கிரமே அந்த பட்டம் எப்போ கிடைக்குமின்னுதான் ஒன்னோட மாமன் காத்து கெடக்கான்”

“அப்பிடியே காத்து கெட”ன்னு சொல்லிவிட்டு விடுவிடுவென வாய்க்கா ஓரமாக ஓடிச்சென்று மறைந்தாள்.

கனகமணியின் தாய்மாமன் மகன் தான் முத்துவேல், இவள் பிறந்த அன்றே பிரசவத்தில் இவளது அம்மா இறந்து போனதும், எந்தங்கச்சிய நீ சரியா கவனிச்சுக்கலை, அதுதான் செத்து போயிட்டான்னும், என்னோட பொண்டாட்டிய பிரசவத்துக்கு நல்ல வைத்தியம் பார்க்கலை’ன்னு மச்சினன் மச்சினனுக்குள் சண்டை வந்து அன்றிலிருந்து பேசிக்கொள்வது கிடையாது.

“என்னடி அதிசயமா இன்னிக்கு தாவாணிதுணிய உடுத்திக்கிட்டு திரியுறே?”ன்னு கேட்ட அப்புத்தா’வை பார்த்து வெக்கசிரிப்பை உதிர்த்தாள் கனகு.

“அப்பத்தா, நம்ம தோட்டத்திலே கொஞ்சம் மல்லிய பறிச்சு நாரு கட்டி கொடு, நான் தலைக்கு வைச்சிக்க போறேன்.”

“முத்து மாமா, ஒன்னோட கடையிலே தங்கசங்கிலி வியாபாரம் பார்க்கிறியாமே? எனக்கு அரைகிலோ’லே கயித்து சங்கிலி செஞ்சு கொடேன்.”

“ஏண்டி வாயாடி, நக்கலா? பொட்டிக்கடையிலே தங்கம் வேணுமா ஒனக்கு? என்னிக்கும் இல்லாத திருநாளா தாவணி கட்டிக்கிட்டு வந்துருக்கே? அதை என்கிட்டே காட்டதானே வந்துருக்கே! புதிய வார்ப்புக்கள் வர்ற ரத்தி மாதிரியே இருக்கே? அவளே மாதிரியே அந்த கம்பத்துக்கு பின்னாடி ஒளிஞ்சுக்கிட்டு லேசா மொகத்தை மட்டும் காட்டிகிட்டு நில்லு, நான் சொன்னது சரியா இருக்கும்…. “

“ஆத்தி, என்னை பார்த்தா வேஷக்காரி மாதிரியா இருக்கு? எவ்வளோ ஒருத்தி நடிக்கிறதுக்காக செஞ்சத என்னைய வைச்சி ஒப்பிட்டு பார்க்கிறியா? ஒங்கிட்டே பேசவே மாட்டேன்”

“ஏண்டி கோச்சிக்கிறே? சும்மா வெளையாட்டுக்கு சொன்னேன், இது ஒனக்கு நல்லாயிருக்கு, இனிமே தெனக்கும் இதேயே போட்டுக்கிட்டு படிக்க போ! ஹிம் ஒன்னோட வண்டி வந்துருச்சு, ஓடி போயி ஏறிக்கோ!”

கல்லூரி பேருந்திலும் இவளை அதிசயமாக பார்த்த தோழிகளிடம் வெக்க சிரிப்பை மட்டும் உதிர்த்து மெளனமாகவே இருந்தாள்.முத்து மாமனுக்கு பிடித்த இந்த உடையை தான் தினமும் உடுத்தவேண்டுமென்று தினமும் அதேமாதிரியே கல்லூரி சென்று வந்தாள். ஒரு நாள் மாலை நேரத்தில் கல்லூரி முடிந்து நண்பர்களோடு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த பொழுது முத்துவின் தந்தை மருதய்யன் எதிர்ப்பட்டார். எப்போழுதும் நேராபார்த்தாலும் ஒரு முறைப்பு பார்வையோடு பார்த்து செல்லும் மாமா இன்று தன்னிடம் பேசவேண்டும் என நோக்கில் வருவதாய் தோன்றியதும் கனகமணியே பேச்சை ஆரம்பித்தாள். பெருசு கொஞ்சம் எடக்கு பிடிச்சதுதான் அதுனாலே கொஞ்சம் எச்சரிக்கையாகவும் பேசவேண்டுமென்னு மனதுக்குள் நினைத்து கொண்டாள்.

“மாமா, நல்லாயிருக்கியா?”

“இருக்கேன், இருக்கேன்…. ஏனாத்தா இப்போல்லாம் தாவணியும்,கை நிறைய வளையலும்,தலையிலே பூவும் வைச்சிட்டு சுத்திருயே? என்னோட பையன் கடையிலே தெனமும் போறதா ஊருசனம் சொல்லி கேட்டேன். இப்பிடியெல்லாம் ஆளை அடிக்கிறமாதிரி உடை உடுத்திக்கிட்டு எம்மவனே மயக்கிறாலமின்னு திரியுறீயா?”

“என்ன மாமா ஒரேடியா பேசிட்டு போறே? நான் இது போடறது பிரச்சினையா? இல்ல ஒன்னோட மவன்கூட பேசுறது பிரச்சினையா?”

“என்னது நான் அதிகமா பேசுறேனா? நீதான் பொட்டகழுத படிக்கப்போறேன்னு சொல்லி தெனமும் ரெண்டு பயலுக கூட திரும்பி வர்றே? இதேமாதிரி என்னோட மவனையும் வளைச்சு போட்டுறாலாமின்னு நினைச்சிக்காதே, இந்த தேவிடியாதனமெல்லாம் வேற எங்கயாவது வைச்சிக்கோ!”

இந்த அமிலம் கக்கும் வார்த்தைகளை கேட்டு என்ன செய்வது என்று புரியாத கனகு விருவிருவென அங்கயிருந்து ஓடிவிட்டாள். வார்த்தைகளின் அவமானம் பொறுக்காதவள் இந்த புளியமரத்தில் தான் கயிறு மாட்டிக்கொண்டாள். ஐயோ ஆத்தா அம்மா’ன்னு ஊரே ஒப்பாரி வைத்து கொண்டு ஓடிய பொழுது என்ன ஏதோ என்று சென்று பார்த்த வேலுவின் விரக்தியின் உச்சத்தில் மனதளவில் செத்து போனான்.

பலவகையான சோகங்களும் மனதை வேதனைப்படுத்தி கொண்டுருக்க உச்சி வெயிலின் கோரத்திலும் அந்த புளியமரத்தினை உத்து கவனித்து கொண்டுருந்தான். தான் நின்று கொண்டிருந்த பரந்துவிரிந்த மலர் பரப்பின் வெளிவட்டம் உதிர்ந்து, சுருங்கி, பாதம் நொறுங்கி விழுந்த அந்த கணத்தை இப்பொழுது உணர்ந்து கொண்டுந்தான். தேக்குமரத்தில் பதிக்கப்பட்ட் செப்புத்தாழ்ப்பாள் கழண்டு விழுந்து ஏற்படுத்திய பள்ளமான வடுவாக கனகுவின் எண்ணம் அவன் இதயத்தில் வலித்து கொண்டுருந்தது.

கனகு’வை கொன்ற தன் அப்பனை என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியாமல் இந்த ஊரை விட்டு போனவன் ஒரு முறை கூட இந்த பக்கம் எட்டிப்பார்க்க வில்லை. பாவம் செய்த தன் தந்தைக்கு தன்னால் கொடுக்கமுடிந்த தண்டனையாக தன்னை அவன் கண்முன்னாலும் காட்டி கொண்டது இல்லை.தன்னுடைய அக்காவிடம் தொலைபேசியோ இல்ல கடிதப்போக்குவரத்தோ இருக்கிறதுனாலே இவன் உயிரோடு இருப்பதாக அவன் அக்காவும் அந்த ஊரும் நம்பியது. இப்போழுதுகூட அக்கா தனக்கு ஒடம்பு சரியில்லை, என்னாயாவது கொஞ்சம் பார்த்துட்டு போடா’ன்னு கெஞ்சி கேட்டதுனால்தான் ஊருக்கு வந்திருந்தான், ஆனால் அக்காவோ தன்னை ஏமாற்றியதும் அப்பன் ஊசுரு ரெண்டு நாளாக இழுந்து கொண்டிருப்பதும் தெரியவந்தது. இந்த இரண்டு நாட்கள் முழுவதிலும் புளியமரத்தை காணவே நேரத்தை செலவழித்து கொண்டுருந்தான். நினைவலைகளில் பலவகையாக அவனை அலைகழித்து கொண்டுந்த தருணத்தில் சிறுவன் ஒருவன் ஓடிவந்து மாமா மாமா, ஒங்கப்பன் செத்து போயிருச்சு, ஒன்னயா சீக்கிரம் அம்மா வரச்சொன்னுச்சு’ன்னு சொல்லி ஓடிவிட்டான். வெயிலின் கொடுமையில் தலையிலிருந்து பாதம் வரை வியர்வை ஆறாக பெருக்கெடுத்து ஓடிக் கொண்டு கண்களுக்கு கீழே மட்டும் வறண்ட பாலைவனமாய் இருக்க மெதுவாக வந்து வீட்டு திண்ணையில் வந்து அமர்ந்தான் வேலு.

“வேலு வந்துட்டான்ப்பா, இனி ஆகுற காரியத்தை பாருங்க, கடைசி ரெண்டு மாசமா அந்தா இந்தா’ன்னு இழுத்துக்கிட்டு இருந்த உசுரு இன்னிக்குதாய்யா போயி சேர்த்துருக்கு, ரொம்ப நேரத்துக்கெல்லாம் இதை வைச்சிருக்க முடியாது. சீக்கிரம் பாடைய கட்டுங்க”ன்னு அடுத்த வீட்டு பெரியவர் சத்தம் போட்டு கொண்டுருந்தார்.

உள்ளே அக்கா மெல்லமாய் விசும்பி கொண்டுருந்தாள். நாலு மாரடிப்பவர்கள் குய்யோ முய்யோன்னு சத்தம் அலறிக்கொண்டுருந்தனர். சேதி கேட்டு கொஞ்சம் கொஞ்சம் கூட்டம் சேர ஆரம்பித்தது. வந்தவர்கள் யாரும் இவன் கையை பிடித்து ஆறுதல் சொல்லவந்ததாக தெரியவில்லை. எப்பவோ விழவேண்டிய பொணம் இன்னைக்கு விழுந்துருக்கு, அத பார்க்க வந்துருக்கோம்’ன்னு திரிந்து கொண்டுருந்தார்கள்.

“ஏம்பா, இவனுக எரிக்கிற சாதிசனமாச்சே, அப்பன் மேலே இருக்கிற கோவத்திலே அவனுக்கு கொள்ளி வைப்பானா இந்த வேலு பையா”ன்னு மெதுவா கேட்டார் தலையாரி.

“ஏய்யா, இப்பிடி சொல்லுற பெத்த பிள்ள கொள்ளி வைக்காமே வேற யாரு வைக்கிறது?” என்ன வேலு சொல்லுறே? நீ கொள்ளி வைப்பே’ல்லே?ன்னு கேட்ட பெரியவர் முகத்தை கூட ஏறெடுத்து பார்க்கவில்லை வேலு.

“அப்பே, பெரும் தண்டனையா அவனுக்கு அந்த சாமியே கொடுத்துருச்சுப்பா, நீயும் மூணு வருசமா ஊருக்குள்ளே வர்றாமே அவனை பார்க்கமே இருந்துன்னு அவன் உசுரை பாதியா கொன்னுட்டே, இன்னமும் கொள்ளி வைக்காமே’ல்லாம் செத்த ஒங்கப்பனை கொடுமைப்படுத்தியிறாதே சாமி, வைக்கிறேன்னு ஒத்த வார்த்தை சொல்லிரு ராசா’ன்னு கேட்ட பெரியவர்க்கு சரி என்பது போலே தலையாட்டினான் வேலு.அடுத்த அரைமணி நேரத்திலே பாடை கட்டி சுடுகாட்டுக்கு எடுத்து வரப்பட்டு சிதை மூட்ட எல்லா வேலையும் நடக்க ஆரம்பித்தது. வேலுவின் மீசை செரைக்கப்பட்டு பானை சுத்தி ஒடைக்கப்பட்டு கொள்ளி கட்டைய வேலுவின் கையில் கொடுத்தான் வெட்டியான்.இவ்வளவு நேரமும் கண்கள் என்னும் இரண்டையும் இரும்புதிரை கொண்டு முடியிருந்தவன், மெல்லமாய் அதில் நீரை சுரந்து கண்கள் பனித்து தலைபகுதி எரு மேல் வைக்கப்பட்ட சூடத்தில் தீ முட்டினான்.

நேற்று அப்பன் அரைகுறை உசுருலும் தன்னை கூப்பிட்டு காதருகே ஒனக்கு நான் பண்ணின பாவத்துக்கு என்னை மன்னிக்கவே மாட்டேன்னு நல்லாவே தெரியும். நீ கொள்ளி வைக்காமே எங்கட்டை வேகாது, ஆனா அதை நீ செய்யமாட்டே! ஒங்காத்தா பத்தினினா எனக்கு கொள்ளி வைடா என சொன்ன அந்த விஷக்காரனின் வார்த்தை சாமர்த்தியத்தை நினைத்து வெறுத்து சுடுகாட்டிலிருந்து நடக்க ஆரம்பித்தான் வேலு.

(சர்வேசனின் நச் என்று ஒரு கதை போட்டிக்காக மற்றும் கொத்ஸ், CVR ஆகியோர் வழியில் ஆங்கில கலப்பில்லாமல் எழுதிய முயற்சி….)

நவம்பர் 29, 2007

காமக் கடும்புனல்

ஆபிஸிலே லேட்டாகி வெறுப்போட உச்சக்கட்டத்துக்கு வந்து பைக் ஸ்டார்ட் செய்ய வந்தால் டயரு பஞ்சராகி கிடந்தததில் வாழ்க்கையை வெறுத்து போயி ஆட்டோ’விலாவது வீட்டுக்கு போலாமின்னு பேஸ்மண்ட்லிருந்து வெளியே வந்தான் முருகேஷன். பெங்களூரூ வாழ் IT கூலிகளுக்கு இருக்கும் அதே அழகு களையான முகத்தை வைத்து கொண்டு MG ரோட்டிலில் நின்று கோரமங்களா பர்த்தீரா’ன்னு கெஞ்சி கொண்டிருந்தான். மாலை ஆறு மணிக்கு ஆரம்பித்து ஒன்பது மணி வரையும் இந்த ஆட்டோகாரர்கள் செய்யும் அலும்பை நினைத்து கொண்டு ஒவ்வொருத்தராய் கேட்டும், ஒருத்தனும் நிக்காமால் அதுவும் நின்றுக்கூட எங்க போகனும் கேட்காமலே கண் புருவத்தை உயர்த்தி கேட்டு அங்கயா? அங்க நான் வரலை’கிற மாதிரி ஒவ்வொரு ஆட்டோவா நகர்ந்து கொண்டுருந்தது. மணி வேறு எட்டு தாண்டி ஓடிக்கொண்டிருந்தது.இனிமேல் மேன்சன் போயி குளித்து சாப்பிட கெளம்ப ஒரு மணி நேரத்துக்கு மேலே ஆகும், இப்போவே பசியோட இருக்கோமே? பேசாமே சாப்பிட்டு வந்து ஆட்டோ பிடிக்கலாமா’ன்னு யோசித்து கொண்டிருந்த வேளையில் “என்னா சார் இங்கன நிக்கிறிங்க, ரூம்’க்கு தானே போறீங்க, கையிலே ஹெல்மெட் வைச்சிட்டு ஆட்டோ கேக்கீறீங்க? பைக் ரிப்பேர்’ஆ? வாங்க நானும் ரூம் தான் போறேன், ஆட்டோவிலே போகலாம்’ன்னு மேன்சன் இம்சை FM கூப்பிட்டதும் முருகேசனுக்கு அப்பாடா என்றிருந்தது.

கோரமங்களாவில் அமைந்துள்ள பேச்சிலர் மேன்சனில் இரண்டாவது மாடியில் இரண்டு பேர் தங்கும் அறையில் இந்த இம்சையோடு தங்கும் அபாக்கிய நிலைமை முருகேஷனுக்கு ஏற்பட்டு மூணுவாரம் ஆகுது. ரூம் மேட் அரவிந்த் அமெரிக்க ஆன்சைட் முணு மாசந்தாண்டா’ன்னு சொல்லிட்டு போனதிலே இருந்து இந்த இம்சைதான் கூட தங்க ஆரம்பித்தது. ஆரம்பத்தில் மேன்சன் ஓனரால் வந்து அறிமுகப்படுத்தபட்ட போது மிகவும் அமைதியாக இருந்த மனுசனின் சுயரூபம் மறுநாள் நைட்தான் தெரிந்தது.புல் மப்பில் வந்து உங்க பேரு முருகேஷனா, சந்திரமுகியிலே ரசினி வடிவேலுவே கூட முரூகேஸா’ன்னு கூப்பிடுவாரு, நானும் அப்பிடியே ஒங்களை கூப்பிடவா’ன்னு கேட்டதும் முருகேஷனுக்கு பத்திக்கொண்டு வந்தது. பேசமா தூங்குங்க, சும்மா டிஸ்டர்ப் பண்ணாதீங்கன்னு கத்திவிட்டு ரூம் கதவை சாத்திவிட்டு தூங்கினதுதான் இம்சைக்கிட்டே பேசிய கடைசி முறை.

“செல்வம், நீங்க எங்க இங்கிட்டு வந்தீங்க”

“ஓ, நான் என்ன வேலை பார்க்கிறேன்னு கூட ஒங்களுக்கு தெரியாது’லே? நான் எலக்ட்ரிசியன்’ஆ இருக்கேன், இங்க ஊரெல்லாம் பிளாட் கட்டிக்கிட்டு இருக்கிற அந்த பில்டர்ஸ்’கிட்டே காண்டாரக்ட் வொர்க் பண்ணுறேன், அல்சூருலே ஒரு வேலை, ஆபிஸிலா வந்ததுனாலே ஆட்டோதான், எனக்கு என்னோமோ ஊரே தெரியாதமாதிரி கோரமங்களா போறதுக்கு MG ரோடு வழியா போறான் இந்த ஆட்டோகாரன்’ன்னு சொன்ன செல்வத்தை ஒரு மாதிரியாக பார்த்தான் ஆட்டோகாரன்.

“ஆஹா, இம்சை தேவையில்லாமே பிரச்சினையே கிளப்புதே? நீங்க சாப்பிட்டாச்சா’ன்னு பேச்சுக்குதான் கேட்டான் முருகேஷன்.

“இல்லீங்க, நான் டெய்லி ரவுண்ட் விடாமே சாப்பிடுறது’லாம் இல்ல, நம்ம ரூம்கிட்டேயிருக்கிற பார்’லே குவார்டர் வாங்கி சாத்திட்டு தான் ஏதாவது சாப்பிடனும், தம்பி நீங்க தண்ணியடிப்பீங்களா?”

“ஹ்ம்ம் நான் டீ டோட்டலர்’னு சொல்லி இவனுக்கு என்னத்த விளங்க வைக்கிறதுன்னு ஹிம் அடிப்பேன் அடிப்பேன்’ன்னு வெறுப்பாக சொன்னான் முருகேஷன்.

“அப்போ இன்னிக்கு போலாமா? இந்தா நம்ம ரூம் வந்தாச்சு, வாங்க அப்பிடியே அடிச்சிட்டு உள்ளாறே போயிறலாம்’ன்னு கூப்பிட்ட இம்சைசெல்வத்தை அனுப்பி வைத்து விட்டா போதுமிடா சாமி’ன்னு பக்கத்து ரூம் மல்லுவிடம் சொல்லி பார்சல் வாங்கி வரச்சொல்லி குளித்து சாப்பிட்டான், மணி பதினொண்ணை தாண்டிய பொழுதில் புல் மப்பில் உள்ளே நுழைந்து இம்சை.

“தம்பி, என்ன இன்னும் தூங்கலையா? என்னமோ படிச்சிட்டு இருக்கீங்க போலே? ஹிம் பெரும் படிப்பு படிச்சவக, இங்கிலிசு பொஸ்தகமெல்லாம் படிக்கீறீங்க, நாங்கெல்லாம் சாதாரணமான ஐடிஐ தானே? எதாவது நானெல்லாம் படிக்கிறமாதிரி பொஸ்தகம் படிக்க கொடுங்களேன்’ன்னு கேட்டு புக் செல்ப்’ஆக இருந்த டிரெஸ் வைக்கும் செல்ப்’ஐ நோண்ட ஆரம்பித்தது இம்சை.

“என்ன தம்பி, பொஸ்தகம் பேரே மார்க்கமா இருக்கு, என்ன காமக் கடும்புனலா? அப்பிடின்னு ஒரு பொஸ்தகத்துக்கு பேரா’ன்னு போதையில் இருந்தாலும் தெளிவாக புத்தகத்தை படிக்க ஆரம்பித்தது.

“ஹிம் படிச்சி பாருங்க, சில கவிதைகள் ரொம்பவே ரசிக்க வைக்கிற அளவுக்கு இருக்கும்”

“தம்பி,புணராமல்’ன்னா என்ன அர்த்தம்’ன்னு கேட்ட செல்வத்தை ஒரு மாதிரியாக தான் பார்த்தான் முருகேஷன்.

“ஹலோ, அது என்னான்னு தெரியாதா? அது சுத்த தமிழிலே மேட்டரு’ன்னு அர்த்தம்.”

“ஹிம் அப்போ சரி தான்”

“எது?”

அத்தனை வேதனைகளுக்கும் ஒரே காரணம்,
புணராமல் இருக்கமுடியவில்லை என்ற நிலைதானே.

“இந்த கவிதைதான்”

“செல்வம் ஒங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சா? ஒங்க வொய்ப் எங்க இருக்காங்க? நீங்க எதுக்கு இங்கயீருக்கீங்க?”

“ஹிம் ஆகிருச்சுப்பா, ஆகி ஒரு வருசத்துக்கு மேலே ஆக போகுது, நான் எங்க சொந்த ஊரு சேலத்திலே EB’லே காண்ட்ராக்ட்’லே லேபரா இருந்தேன், வினைக்குனே எங்க அக்கா மவளே கலியாணம் பண்ணி வைச்சாங்க, மொத ராத்திரி அன்னிக்குதான் தெரிஞ்சது, அவ யாரோயோ லவ்வு பண்ணுறான்னு என்னை தீடிரென்னு அவளுக்கு கட்டிட்டாங்கன்னு!. போயி தொட்டா அழுவுறா, இப்போவே செத்து போயிருவேன்னு அழுது சாதிக்கிறா, அதுக்கு மேலே நாமே என்ன செய்யமுடியும்? கவிதையிலே இருக்க’கிற வார்த்தை தவிர்த்து வாசிச்சா எனக்கு சரியா இருக்கும்’னு போதையிலே இருந்தாலும் தெளிவாக பேசிய செல்வத்தை வெகு ஆச்சரியமாக பார்த்தான் முருகேசன்.

“சரி அதுக்கப்புறம் சமாதானம் ஆகலயா?”

“எங்கே நான் அங்கயிருந்தா இதிலே சண்டை வருதுன்னு நானும் இந்தா ஊரை விட்டு வந்து நாலு மாசமா போவுது, வாரம் தவறாமே போயி பார்த்துட்டு வந்துறேன், எங்க அப்பன் ஆத்தா’க்கு தான் ஏதோ சந்தேகம் வந்து என்னை மாதிரியா பார்க்கிறாங்க, ஆனா எம்பொண்டாட்டி’க்கு தான் புரியவே மாட்டங்கிது’னு சொன்ன செல்வத்தின் கலங்கிய கண்களை கவனித்தான் முருகேஷன்.

“சரி செல்வம், இப்போ தூங்குங்க, வேற எதுவும் பேசவேணாம்”

அடங்காத காமத்துடன் தவித்துக்கொண்டிருக்கிறேன்
உனக்கோ அழ்ந்த அயர்ந்த உறக்கம்
விடிந்ததும் எப்படியாவது உன் வாயைப் பிடுங்கி
ரெண்டு அறை விடுவேன்

“இந்த கவிதைய படிச்சதும் நானெல்லாம் எத்தனி ரெண்டு அறை விட்டுருக்கனும் தெரியுமா தம்பி’ன்னு காலையில் குளித்து வந்ததும் கேட்ட செல்வத்தை பார்த்ததும் மிகவும் பரிதாபமாக இருந்தது, வயது முப்பது தாண்டி மூணு – நாலு வருசம் இருக்குமுன்னு தாடையிறக்கதிலும், காதுக்கு மேலே வெள்ளி முடி துளிர்ந்ததிலும் தெரிந்து கொண்டான் முருகேஷன், அதுவும் இந்த புக்’ஐ வரிக்கு வரி படித்து கொண்டுருக்கும் செல்வத்தை பத்தி என்ன நினைப்பதுமின்னு குழப்பமடைந்தான்.

“தம்பி நேத்து நைட் போதையிலே ஏதுவும் அதிகமாக பேசிட்டோனா?”

“அதெல்லாம் இல்ல செல்வம், ஒங்க கஷ்டத்தை சொன்னீங்க அவ்வளவுதான்’ன்னு பரிதாப பார்வையோடு சொன்னான் முருகேஷன்.

“சரிப்பா, நான் வேலைய முடிச்சிட்டு சாயங்காலமா ஊருக்கு போயிட்டு திங்கக்கிழமை’லே வாறேன்னு சொல்லிவிட்டு செல்வம் கிளம்பியதும் தானும் அலுவலகம் செல்ல வேண்டி கழுத்திலே மாட்ட வேண்டிய பட்டை,பள பள’ன்னு ஷீ, சாயம் போன கலரிலே டிரெஸை மாட்டிக்கொண்டு ஆட்டோவுக்கு தவம் கிடைக்கலான்.

“ஹலோ, அரவிந்த் நம்ம ரூம்’லே ஒரு ஓட்டை FM இருக்குன்னு சொன்னேன்’லே, அது கதையே நேத்து நைட் சொன்னுச்சு, அவரை பார்க்கவே பரிதாபமா இருக்குடா”

“ஹிம், ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான கஷ்டம்”ன்னு அரவிந்த் அமெரிக்கவில் இருந்து கொண்டு செல்வத்திற்கு பரிதாபப்பட்டான்.

திங்கக்கிழமை விடிந்த பொழுதிலே ரூம்க்கு வெளியே சத்தம் கேட்பதை கேட்டு கண் விழிந்து கதவே திறந்து பார்த்தான் முருகேஷன், செல்வந்தான் பக்கத்து ரூம் மல்லுவிடம் மல்லு கட்டி கொண்டிருந்தான்.

“செல்வம், நீங்க மொதல்ல உள்ளே வாங்க, எதுக்கு அவன்கிட்டே சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க?”

“தம்பி, ஊருலே இருந்து வந்ததும் இவன் மூஞ்சியிலே முழிச்சிட்டோமேன்னு எப்பிடியிருக்கே சேட்டா’ன்னு கேட்டேன், என்னாமோ என்னை விசித்திர பிராணியை பார்க்கிறமாதிரி பார்த்துட்டு குடிகாரன், லூசு மாதிரி உளறவன்’ன்னு மாதிரி மலையாளத்திலே முணங்கிட்டு போறான், எனக்கு என்ன மலையாளமா தெரியாது?”

மறுபடியும் செல்வம் ஊருக்குள் போயி பிரச்சினைய வளர்த்து வந்தது தெரிந்தது, அதுதான் அந்த கோபத்தை இங்கே காட்டிக்கொண்டிருக்கிறார் எனவும் புரிந்து கொண்டான்.

“சரி பஸ்’லே வந்த அலுப்பு இருக்கும், கொஞ்சம் நேரம் தூங்குங்க, மணி ஆறுதானே ஆகுது, வேலைக்கு போறதுக்கு இன்னும் டைம் இருக்குலே?”

“நீங்க தூங்குங்க தம்பி, நான் பொஸ்தகத்தை படிச்சிட்டு இருக்கேன்’னு காமகடும்புனலை தூக்கி வைத்து வாயில் முணங்கிட்டு இருந்தான் செல்வம்

ஜனனத்தில் உருத்திரண்டு, மணத்தில் ஊர் திரண்டு
இல்லறத்தில் உறவு திரண்டு, துறவறத்தில் அறிவு திரண்டு
மரணத்தில் தூர்ந்து…

இரவு அலுவலகம் முடிந்து அறைக்கு திரும்பும் பொழுது வாசலில் எதிர்ப்பட்ட மல்லு ஒங்கட ஆளு ரொம்பவே குடிச்சிட்டு ரூமிலே சத்தம் விட்டுருக்கு, என்னாண்ட கேளுங்கோ’ன்னு அழகு தமிழில் சொன்னதும் விருவிருவென படியேறி ரூம்’க்குள் ஓடினான்.அங்கே கண்ணீர் ஒழுக சரியான போதையில் தனக்கு தானே செல்வம் பேசிக்கொண்டுருந்தான்.

“செல்வம் என்னாச்சு, ஏன் இப்பிடி பண்ணிட்டு இருக்கீங்க?”

“ஆமாம் தம்பி, தப்பு பண்ணிட்டேன், நேத்து வீட்டிலே என் பொண்டாட்டிய நினைச்சிட்டே எங்கம்மா எங்கப்பா எல்லாரையும் கண்டமேனிக்கு திட்டிட்டு வந்துட்டேன், அந்த நேரமா வந்த அக்காவை கூட பயங்கரமா திட்டிட்டேன், அவங்களுக்கு என்னோட வேதனை தெரியாது, எதுக்கு திட்டினேன்னும் தெரியலை, என்ன சொல்லிலாம் திட்டினேன்னும் தெரியலை’ன்னு அழுது கொண்டே சொன்ன செல்வத்தை நினைத்து இரக்கப்பட்டான் முருகேஷன். இந்த சம்பவத்திற்கு பிறகு தினமும் போதை உச்சக்கட்டத்தினுடே ரூம்’க்குள் வந்த செல்வத்தை ஒன்றும் சொல்லவே இல்லை. போதையிலும் என்னோட மனசை புரிஞ்சுப்பா,அவளுக்காக தான் எதுவும் இன்னமும் செய்யமே இருக்கேன்’ன்னு சுயபட்டயம் வாசிச்சு கொண்டே இருப்பார்.

“ஹலோ, முருகேஷனுகளா, நானு செல்வராஜ் சம்சாரம் பேசுறேங்க, கொஞ்சம் அவர்கிட்டே போனை கொடுக்கீறிங்களா’ன்னு மொபைலில் கால் செய்த செல்வம் மனைவியிடம் அவர் இன்னும் ஆபிஸிலே இருந்து வரலை, வந்தா ஒங்க பக்கத்து வீட்டு நம்பருக்கு கால் பண்ண சொல்லுறேன்’னு போனை துண்டித்தான். அடுத்த அரை மணி நேரத்தில் மப்பில் வந்த செல்வமிடம் சொன்னதும் ஏன் போன வாரம் போயி கொடுத்துட்டு வந்த காசு தீர்ந்து போச்சா’ன்னு அவளே திரும்ப பண்ணட்டும்’ன்னு பெட்’லே போயி படுத்துறங்கி விட்டான் செல்வம்.

அடுத்து இரண்டு நாட்களாக செல்வத்தை காணாத முருகேஷன் எப்பிடியோ செல்வம் சம்சாரம் அவரை போனிலே பிடிச்சு ஊருக்கு வரசொல்லிருச்சு போலே? இந்தாளு ஊருக்குள்ளே பண்ணிட்டு வந்த கலாட்டா’விலே குடும்ப பிரச்சினை எதுவும் வந்திருக்கும், அதுதான் அங்க போயிட்டாருன்னு தனக்கு தானே நம்பிக்கொண்டிருந்தான் முருகேஷன், அடுத்த இரண்டு தினங்களுக்கு பிறகு தீடிரென்னு நைட் பத்து மணிக்கு போதை இல்லாமல் வந்த செல்வத்தை பார்க்கவே மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

“என்ன செல்வம், சொல்லாமே கொள்ளாமே எங்க போயிட்டிங்க?”

“ஆமாம் தம்பி, அன்னிக்கு அவ போன் பண்ண இல்ல? எங்கம்மா’வுக்கு கொஞ்சம் ஒடம்பு சரியில்லையாம், அதுதான் மறுநா காலையிலே நான் வேலை பார்க்கிற சூப்பிரெண்ட்’கிட்டே மறுக்கா போன் பண்ணி சொல்லியிருக்கா, நானும் ஊருலே போயி நாலு நாளு இருந்துட்டு வந்தேன், தம்பி இன்னொன்னு நான் எங்க ஊருக்கே போகப்போறேன்ப்பா, இந்த வேலையெ விடப்போறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன், அவங்க நாளைக்கு ஒரு நா வேலைய முடிச்சிட்டு காசை வாங்கிட்டு கிளம்ப சொல்லிட்டாங்க’ன்னு சொன்ன செல்வத்தை வெகுவான ஆச்சரியத்தோடு பார்த்தான் முருகேஷன்.

“தம்பி நீங்க கேட்க வர்றது எனக்கு தெரியுது, என்னோட பொண்டாட்டி புரிஞ்சுக்கிட்டாப்பா!! நான் இவ்வளவு நா அமைதியா இருந்ததுக்கு பலன் கிடைச்சிருச்சு, அப்பிடியே இன்னிக்கு நைட் வந்து ஒங்கக்கிட்டெ சொல்லிட்டு காலையிலே போறப்பவே பேக் தூக்கிட்டு வேலைக்கு போயி எல்லாத்தையும் முடிச்சிட்டு ஊருக்கு கிளம்புறேன், அப்புறம் இன்னொன்னு இந்த புத்தகத்தை நான் எடுத்துக்கலாமா’”

“ஓ தாராளமா எடுத்துக்கோங்க! நல்லப்படியா வாழ்க்கைய ஆரம்பிச்சதுக்கு வாழ்த்துக்கள்”ன்னு சொன்னதும் செல்வத்துக்கு பெருமை பிடிபட வில்லை. நைட் கொஞ்சம் நேரமும் தன்னுடைய படிப்பு, அதற்கப்புறம் வேலை, எப்பிடி கல்யாணம் நடந்தது எனவும் சொல்லிவிட்டு வீட்டு அட்ரஸ் குறிச்சு வைச்சுக்கோங்க, கட்டாயமா ஊருக்கு வரனுமின்னு தூங்கிபோனான் செல்வம். அதன்பின்னர் தன்னுடைய வழக்கமான அலுவலில் எல்லா விஷயங்களுக்கும் மறந்து போனான் முருகேஷன். ஆறு மாதங்களுக்கு பிறகு தன்னுடைய டீம் மேட் ஒருத்தன் கலியாணம் சேலத்தில் நடக்கும் சமயத்தில் செல்வத்தையும் பார்த்துட்டு வரலாமின்னு அவன் கொடுத்து சென்ற அட்ரஸ் காகித்தை எடுத்து வைத்து கொண்டு கல்யாணம் முடிந்ததும் செல்வத்தை தேடிப்போனான். சேலத்தின் நகரை விட்டு கொஞ்சம் தள்ளி வெகு சாதரண குடியிருப்பு பகுதியில் அவன் வீடு கண்டுபிடிக்க கொஞ்சம் கஷ்டமா தான் இருந்தது.

“செல்வம் அண்ணா? செல்வம் அண்ணா’ன்னு வீட்டுக்கு வெளியே நின்னு சத்தம் விட்ட முருகேசனை மெதுவா எட்டி பார்த்தாள் வயதான பெண்மணி.

“அம்மா நானு செல்வம் பெங்களூரூலே தங்கியிருந்தப்போ கூட தங்கியிருந்தேன் என்னோட பேரு முருகேஷன்’ன்னு சொல்லி அறிமுகப்படுத்தி கொண்டான்’

“ஓ நீங்கதானா தம்பி அது, வாங்க உள்ளுக்குள்ளே என தீடீரென்னு கண் கலங்கிய செல்வம் அம்மாவை பார்க்க வித்தியசமாக இருந்தது.

“என்னாம்ம்மா என்னா ஆச்சு? எதுக்கு கண் கலங்குறீங்க?”

“தம்பி, என்னோட செல்வம் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி விஷம் குடிச்சி செத்து போயிட்டான்ப்பா, பாவிப்பய ஊரிலே இருந்து வந்ததிலே இருந்து கொஞ்சநாளு நல்லாதான் இருந்தான், என்ன ஆச்சோ தெரியலை, தீடீரென்னு பேயி பிடிச்சமாதிரியே கொஞ்சநாளு இருந்தான், தீடீரென்னு விஷத்தை குடிச்சி செத்து போயிட்டான், எங்களை விட்டு பிரிஞ்சு போன புள்ள திரும்ப வந்துருச்சேன்னு சந்தோஷமா இருந்தேன், ஆனா கொஞ்சநாளிலே எங்களை விட்டு ஒரேடியா பிரிஞ்சே போயிட்டான்னு அழுது கொண்டிருதார் செல்வம் தாய்.

அறைக்குள் இருந்து கலங்கிய கண்களோடு நிறைமாத கர்ப்பிணியாக வெளியே வந்தாள் செல்வம் மனைவி. கேட்கவே கஷ்டமா இருக்கும்மா, நான் கிளம்புறேன் சொல்லி விட்டு வெளியே வந்தான் முருகேஷன்.

முடிவே தெரியாத ஒன்றை
முடிக்கத் தெரியவில்லை
முடிவற்று நீளும்
முடிவற்றவைகளால்
முடியப்பட்டிருக்கிருக்கின்றன
முற்றும்.

கவிதைகள்:- நா.மகுடேஷ்வரனின் காமக் கடும்புனல்

செப்டம்பர் 27, 2007

சவடன் கதை

“யே ஆத்தா, எங்க சவடப்பச்சியை விடிக்காலே இருந்தே காணேலே? எங்கன போயிருக்கு?”ன்னு வீட்டுக்கு வெளியே நின்னு கேட்ட புள்ள யாருன்னு பார்க்க கண்ணை குருக்கிக்கிட்டு வீட்டை வெளியே வந்துச்சு பர்வதப்பத்தா.

“வாடியாத்தா, மருதமீனாட்சி, என்னாத்துக்கு அப்பச்சிய தேடி வந்தே?”

“அப்பத்தா என்னோட பேரு மீனாட்சி தான், சுருக்குன்னு மீனா’ன்னு கூப்பிடு, அப்போதான் இஸ்டைலா இருக்கும்”

“என்னடியாவேளெ சுடல, சுட்டுருச்சுன்னு சொல்லிக்கிட்டு இருக்கேவே, அவன் மருதக்கு போயிருக்கான், கருக்கலிலே போனான், இன்னும் வந்த சேதிய காணாம். என்னா சொல்லனும்?”

“நான் என்ன அப்புச்சி’கிட்டே சேதி சொல்லப்போறேன். சொக்கய்யா தான் பார்த்துட்டு வர சொன்னுச்சு”

“சரி அவன் வந்தா சொல்லிவிடுறேன். சொக்கன் சொல்லிதான் அவன் டவுனுக்கு போயிருக்கான்னு நினைச்சி கிடந்தேன்.”

“வந்தா சொக்கய்யா கடைக்கு வரசொன்னுச்சு’ன்னு சொல்லிருப்பத்தா, நானு கம்மா’கிட்டே பாண்டியாட போறேன், நான் இங்கன வந்தேன்னா எங்கம்மா வந்து கேட்டுச்சு’ன்னா சொல்லிரு”ன்னு சொல்லி விட்டு ஓடி விட்டாள்.

கலியாணம் ஆன ரெண்டேமாசத்திலே சீக்கு வந்து செத்துப் போன புருசன் வீட்டிலே இருந்து தம்பி சவடன் வீட்டிலே தங்கினவ தான் பர்வதத்தா. இப்போ வயசு அறுவதஞ்சு தொட்டுருச்சிக்கிறதுக்கு பார்க்கிற பார்வைக்கு கண்ணை குறுக்கி மறுக்கி ஆள கண்டுபிடிக்கிற திரணி’லே தான் அந்த ஊரே நம்புச்சு, இல்லன்னா இன்னும் அம்பது தாண்டிருக்காதுனு தான் சொல்லிருப்பாங்க. பதினாறு வயசிலே மூளியாகி ஒழைக்க ஆரம்பிச்சதுதான் இன்னமும் நாத்து நடுறது, கடலை ஒடக்கிறது, அறுவடையிலே தூசி தட்டுறது’ன்னு எந்த கழனி வேலையானலும் செய்யும். அதுக்கூட ஒடம்பொறந்த சவடமுத்து ஊருக்கு ஒழைக்கிற உத்தமரு, ஒன்னேஒன்னு கண்ணேகண்ணு’ன்னு ஆம்பிள்ள பிள்ளய பெத்துட்டு துபாய் சீமையிலே வேலை பார்க்கிறான்னு மட்டும் தெரிஞ்சுக்கிட்ட நல்லவரு. இவரு கூடயும் இருவது வருசம் குடும்பம் நடத்தி சுமங்கலியா செத்துப்போச்சி பேச்சியாத்தா.

“ஏண்டா முத்து, கருக்கலிலே மருத போறேன்னு போனவன் பொழுது சாய வர்றே? எங்கேடலே போயிருந்தே?”

“மேலசந்து மருததேவரு பொண்ணுவயத்து பேத்தி இருக்குலே அது நேத்து பொழுதுலே பெரிய மனுசியாட்டாளாம், அவக வீடு அனுபானடி’லே இருக்குலே, அதுதான் மருதனும் நானும் அங்கன போயி மேக்காரியமெல்லாம் பார்த்திட்டு வந்தோம்”

“என்னோமோ, ஒன்னதேடிக்கிட்டு சொக்கன் அனுப்பிச்சான்னு ஊருக்குள்ளே இருக்கிற குஞ்சான் குளுவனெல்லாம் வந்து நீயிருக்கியான்னு கேட்டு போச்சுக”

“அப்பிடியா, ஆளு அனுப்பினனா? என்ன சோலியா இருக்கும்? ஒரு எட்டு பார்த்தியாறேன், மத்தியானமா அந்த வீட்டிலே தின்னது,பசி வயத்த கிள்ளுது, கேப்பகஞ்சி காஞ்சப்போறேன்னு நேத்து சொன்னீயே, இன்னமும் மிச்சம் இருக்கா, சொக்கப்பச்சிய பார்த்திட்டு வந்து குடிச்சிக்கிறேன்.”

“ஹிம் அதெல்லாம் இருக்கு, வெரசா வா, பேசுறேன் பேசுறேன்னு விடிய விடிய ரெண்டு பயலுகளும் பேசிக்கிட்டு கெடக்காதீயே”

சவடமுத்துவும், சொக்கனும் ஓரு சோட்டு வயசு, அந்த காலத்திலே படிக்க பள்ளிக்கூடம் அனுப்பினா ஊரு வாயக்காலிலே சுத்திட்டு கிடந்த பட்டிக்காட்டு பக்கிகதான். சவடன் கூலிவேலைக்கும் கொலுத்து வேலைக்கும் போயி சம்பாரிக்க ஆரம்பிச்சதும், சொக்கு அந்த வியாபாரம் பார்க்கிறேன், இந்த வியாபாரம் பார்க்கிறேன்னு நஷ்டப்பட்டு நோகமதானே நாமெல்லாம் கஞ்சி குடிச்சோம்! எதுக்கு கஷ்டப்பட்டு பொழக்கனுமின்னு கத்துவட்டி கொடுத்து வாங்கி பொழைக்க ஆரம்பிச்சான். கடன் வாங்கவறனுவக்கு விலாசம் காட்டனுமின்னு ஊருக்குள்ளே இருந்த டீக்கடைக்காரனுக்கே கடன் கொடுத்த ஆறேமாசத்திலே வட்டிக்கு கடையே எழுதி வாங்கிட்டான். அதிலே கொஞ்சகொஞ்சமா விஸ்தரிச்சு இப்போ கிளப் கடையா ஆக்கி சும்மா வந்தா வரட்டும் வராட்டி போகட்டுமின்னு உட்கார்ந்தவன் தான்.

“சொக்கா, என்னாப்பே கூப்பீட்டு விட்டியா? அக்கா சொன்னுச்சு? ஏதும் மருத போயிட்டு வர்ற சோலி இருக்கா என்ன?”

“வாப்பே சவுடா, எங்கனப்போயிருந்தே? நேத்து ரவைக்கு வீட்டுக்கு போனவ இன்னிக்கு ரவைக்கு இங்க வர்ற? என்னாலே சேதி?”

“ஆத்தி ஒனக்கு விசயமே தெரியாதா? மேலதெரு மருதனோட பிள்ளை ஒன்னே அனுப்பானடி’லே கொடுத்து இருந்தானே? அவ மூத்தப்பிள்ள பெரியமனுசாயிட்டா. அவன் மருவானோட இந்த பய மவன் சண்டை போட்டானாமே, அதுக்கு இவரு முருக்கிக்கிட்டு நான் வரமாட்டேன்னு சொல்லிட்டான், அதுனாலே மருதய்யன் போயி சண்டைய தீர்த்து வைக்கிறேன்னு ரெண்டு பய காலிலேயும் விழுந்து எந்திருச்சிட்டு வந்தான்.”

“நீ என்னாப்பே அங்கன போயி பண்ணினே?”

“நான் என்ன பண்ணேனா? நாட்டமை இல்லாத ஊருக்குள்ளே தடியெடுத்தவந்தானே தீர்ப்பு சொல்லனும், அதுதான் ரெண்டு பயலுகள்கிட்டேயும் சமாதானம் பேசினேன், பக்கி பயப்புள்ளக சண்டை வந்ததே சராயம் குடிக்கப்போன வந்த கைகலப்பாம், எழவெடுத்தவனுக அப்பனுக்கு தெரிஞ்ச கோவப்படுவான் சண்டை போட்ட காரணத்தை தவிர மத்ததே தான் பேசிட்டு கெடந்தானுக.”

“கடைசியா என்னாச்சி? சமாதானம் ஆனானுகளா இல்லயா?”

“ஹிம் மருதமவன் என்னத்த நினைச்சானோ சரின்னு போயி கூரை கட்டப்போயிட்டான்.”

“அதுதாண்டா ஒன்ன எங்கனயும் இந்த பயலுக கூட்டிட்டு போறது, ஆகாத காரியத்தையும் ஆக்கி வைக்க பொறந்தவண்டா நீ சவடா!”

“யேப்பே என்னத்துக்கு இது, இருவது சந்துக இருக்கிற ஊருக்குள்ளே இருக்கிற எல்லாபயலுகளும் நமக்கு வேண்டப்பட்டனுவக தான், அவனுகளுக்குன்னு கஷ்டமின்னு வந்தா நமக்குன்னு வந்ததுதானே?”

“ஏலேய் ஒன்னவர சொன்ன காரியத்தை விட்டு வேற என்னத்தயோ பேசிட்டு இருக்கோம் பாரு, சுப்பைய்யாசாரி சங்கிலி செஞ்சு கொண்டாந்தாட்டாரு, இந்தா பாரு, காளியத்தா’கிட்டே கொடுக்கமுன்ன ஒன்கிட்டே காட்டிபிடனுமின்னு தான் ஒன்ன தேடின்னேன்.”

“ஓ…. ஆமாலு, அவரு பத்து நாளாகுமின்னு சொன்ன தவணை’க்கு சரியா முடிச்சி கொண்டாந்துட்டாரா, அடியாத்தி நல்லாதாய்யா இருக்கு, ஒத்தக்கொடின்னாலும் கெட்டியா இருக்குலே, ஆத்தா பார்த்துச்சின்னா பூரிச்சிருமிலே,என்னோட கெழவி கண்ணமூடுறதுக்குள்ளே தாலிகொடி செஞ்சு கொடுக்கலாமின்னு பார்த்தேன், முடியலை எழவு, இப்போ வந்திருக்கிற மருமகளுகாகவது வாங்கி செஞ்சு மாட்டுன்னு சொல்லிருக்கேன், சரின்னு சொல்லிருக்கான் பய, அவங்க இந்த வருச சித்திரை திருவிழா’வுக்கு வந்தாதான் தெரியும்”

“சவடா, மவன்னு சொன்னதும் ஞாபகம் வருது, பய மருத’லே வீடு ஒன்ன வாங்கி போட்டேன்னே? அதை என்னாடா வாடகைக்கு விட்டுருக்கானா என்ன?”

“ஆமாப்பே, கீதளத்திலே குடும்பம் ஒன்னு குடியிருக்கு, மெத்தயிலே சும்மாதான் போட்டு வைச்சிருக்கான், திருவிழா எதுவும் வந்தாலும் அங்கன வந்து தங்கிருக்கனுமின்னு வைச்சிருக்கான்.”

“சவடமாமோய், ஒன்னந்தானே நானு பொழுது சாயுற நேரத்திலே இருந்து தேடிட்டு இருக்கேன்”ன்னு பெருங்கொரலெடுத்து கூப்பிட்ட முத்தையா’வே பார்க்க வெளியே வந்தான் சவடன்.

“ஏனேலே, பால் தரலன்னா மாட்டுக்கே தீனி வைக்கமாட்டியே, இப்போ என்னத்துக்கு என்னை தேடினே?”

“ஆத்தி, விசயமின்னா தானே ஒன்னை ஊரே கூப்பிடும், அப்போ நான் இந்த ஊருக்காரன் இல்லயா? நீ இப்போ எங்க வீட்டுக்கு வா, பின்னாடி கொத்து வேலை பார்க்கனும், என்னாஏது பண்ணலாமின்னு நீயே வந்து பாத்து சொல்லு.”

“சொக்கப்பா , அப்பச்சி வீடு வரைக்கு போயாந்திறேன்… நீ இங்கன இரு, கஞ்சி குடிக்க சேந்தே வீட்டுக்கு போலாம்”

“ஏமலே, மாடுகண்டுக்கு தண்ணி காட்ட இருக்கிற எடத்தை எடுத்து ரூம்பு தடுக்கப்போறியா? அப்போ ஒன்னோட மாடுகள எங்கன கட்டிப்போடுவே?”

“இருக்கிறதே இம்புட்டு இடந்தானே சவடமாமு, மூத்த பயலுக்கு வேற வயசு முப்பதை தாண்டிருச்சு, அவனுக்கு அடுத்தமாசத்திலே கலியாணத்தை நடத்தி இந்த இடத்திலே வைச்சிரலாமின்னு பார்க்கிறேன். இப்போ பொழங்கிற இடம் பத்தாதிலே? பொண்ணு வேற ஆளாயிருக்கு…..”

“வெளங்கிருச்சு, ஆக இந்த இடத்திலே ரூம்பு தடுக்கத்தான் போறே? யாற கூட்டி கட்டப்போறே? மேலக்கால் பழனி பையன் மேஸ்திரி வேலைதானே பார்த்திட்டு இருக்கான், அவனை கூட்டியே முடிச்சிருவோமா? என்ன சொல்லுறே?”

“மாமு ஒனக்கு என்ன தோணுதோ செய்யி, நானு ஒன்னியும் சொல்லலை.”

“நானு அவன்கிட்டே பேசிட்டு சொல்லுறேன், இப்போ மணி என்ன ஏழா எட்டா.. இன்னோரம் வந்திருப்பான், அவனை போயி கையோட கூட்டியாந்து எம்புட்டு ஆகுமின்னு அவங்கிட்டே விசாரிச்சுபிடலாம்.”

“சவடப்பச்சி சவடப்பச்சி, ஒன்ன சொக்கப்பச்சி கடையிலே தேடிட்டு இருக்காங்க… என்னத்தையோ காணோமா, நீ எதுவும் பார்த்தியான்னு கேட்க ஒன்ன தேடிட்டு இருக்காங்க, வெரசா போ”ன்னு சொல்லிட்டு ஓடிப்போன சீனியாத்தா பேரனோட வேகவேகமாய் சொக்ககடைக்கு ஓடியாந்தான் சவடன்.

“வா மாமு, எங்கன அப்பிடியே நைசா நழுவி ஓடிப்போயிட்டே”ன்னு குத்தலாக கேட்ட சொக்கன் மகன் வேலுவின் முகத்தை பார்த்ததும் சவடனுக்கு பயங்கரமா இருந்தது.

“என்னப்பச்சி, என்னா சொல்லுறே? எங்கன நானு நழுவி போனேன், முத்தைய்யன் கூப்பிடன்னு அவன் வீட்டுக்கு போயிந்திருதேய்ன்.”

“அதுதான் மாமு, போறப்போ என்னத்த எடுத்துட்டு போனே?”ன்னு இன்னொரு பக்கம் சொக்கனோட மூத்த மவன் சாமிக்கண்ணு குதர்க்கமா கேட்டான்.

“ஏலேய்.. என்னாடாப்பே என்ன பேச்சு பேசுறீங்க? என்னத்த நான் எடுத்து போனேன், சொக்கா என்னாப்பே நடத்துச்சு இங்கன”

“என்னத்த அப்பன்கிட்டே குறுக்கு வெசரணையே போடுறே? நீ போனதிலேயிருந்து செஞ்சு வாங்கியாந்த கயித்து சங்கிலியை காணாம், கடைக்குள்ளே தேடு தேடுன்னு தேடியாச்சு, எங்கனயும் காணாம், அப்போ என்னத்த நினைக்கிறதுன்னு நீயே சொல்லு?”

“ஆத்தி, மடப்புர மாரியாத்தா, என்னா சோதனை இது? சாமி நானு என்னத்தயும் எடுக்கல’ப்பே! சொக்கா நீயாவது வாய தொறந்து சொல்லுப்பே”

“அதுவே பேச்சு மூச்சில்லாமே கெடக்கு, நீ பேச்சுவாக்குலே ஒன்னோட தொபையி மருமக கழுத்திலே இதேமாதிரி மாட்டனுமின்னு சொன்னியாமே, அதுக்குதான் எடுத்து வைச்சிருக்கீட்டியா?”

“வேலு பார்த்து நிதானமா பேசுப்பே, ஓரேடியா கொட்டிறாதே, சொக்கன் எதான்னுச்சும் சொல்லட்ட்டும், நானு பேசிக்கிறேன்”

“ஏலே சவடா, ஒன்கிட்டே சங்கிலிய காட்டிட்டு காகிதத்திலே தான் மடிச்சி வைச்சேன், ஆனா எங்கன போச்சின்னு தான் காணலை, ஆனா இந்த பயலுக தான் தேடி பார்த்தானுக, எங்க போச்சின்னு தெரியலை’டா’ன்னு கண்ணிர் விட்டு மூர்ச்சையாகினான் சொக்கன்.

“ஏலேய் வேலு அப்பனை பிடிடா, இந்த பெருச தூக்கி போட்டு மிதிச்சாதான் உண்மைய சொல்லும், ஏய்யா ஒன்னோட தராதரம் என்ன எங்க தராதரம் என்ன? கீச்சாதி’லே இருந்தாலும் ஒன்னையும் எங்கப்பன் மதிப்பு கொடுத்து வைச்சிருந்தான் இல்ல, எப்புறம் என்ன இந்த ஈனப்புத்தி”ன்னு வார்த்தைகளாலும் கைக்களிலும் வெளுத்தான் சாமிக்கண்ணு.

“அப்பே கண்ணு, நானு எடுக்கலை’ப்பே, எனக்கு எடுக்கனுமின்னு அவசியமும் இல்லப்பே. நல்லா தேடிப்பாருங்கய்யா”

“எல்லாம் தேடி பார்த்துட்டு ஒன்னை தேடி ஆளு அனுப்பினோம்…. அன்னனைக்கு கடைகண்ணிக்கு போயி மேவேலை பார்த்து கொடுத்து சம்பாரிச்சிட்டு இருக்கிற ஒம்பையன் எப்பிடிய்யா துபாயி போனான், இப்பிடிதான் அப்பன்கிட்டே தெனம் தெனம் பேச்சை கொடுத்து காச களவாண்டு போனீயா சொல்லு?”

“ஆத்தி, இப்பிடியெல்லாம் என்மேலே பழி போடாதேப்பே, காசு இல்லன்னா திங்காமே கூட செத்து போயிருப்போமே தவிர இந்த மாதிரியெல்லாம் செஞ்சுருக்க மாட்டேப்பே… என்னை நம்புப்பே, நான் எதையும் எடுக்கலை அய்யா, சாமி என்னை நம்புய்யா”

சவடன் கைகும்பிட்டு அழுதும் அதை காதிலே வாங்கிக்காத சாமிக்கண்ணு சவடனை இழுந்து போட்டு முதுகில் குத்தி சொல்லிரு சொல்லி’ன்னு அடித்து கொண்டுருந்தான், ஊரே கூடி என்ன நடக்குதுன்னு உள்ளுக்குள்ளே விசாரிச்சிட்டு அதுகளே அப்பிடியா சேதி’ன்னு வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சிதுக. சவடனை இழுத்து போட்டு தள்ளி படாதபாடு படுத்தி கொண்டிருந்தனர் சாமிகண்ணுவும் , வேலுவும் அவனை அங்க இழுந்து தள்ளுவதும், இப்பிடி தள்ளியும் அடித்து கொண்டிருந்ததில் மூலையில் போயி விழுந்தான் சவடன். மூலையிலே வடை, பஜ்ஜி தின்னு போட்ட இலை பொறுக்கும் சட்டியிலிருந்து விழுந்தது சங்கிலி பொட்டலம்.

“சாமிகண்ணுண்ணே, சங்கிலி இங்கன கெடக்கு, கருமம் இந்த எழவை பார்க்கமே விட்டோம் பாரு, இப்போ ஊரே வேடிக்கை பார்த்திட்டு கெடக்காருய்ங்க, இப்போ என்னத்த பண்ணி தொலைக்கிறது?”

“ஹிம் ஹிம் செவன்னு இரு, நான் பார்த்துக்கிறேன்”ன்னு வெசக்காரபயலுக ரெண்டு பேரும் குசுகுசுன்னு பேசி என்னத்தயோ முடிவு எடுத்தானுக.

“ஆத்தி வெவரமான பெருசு, எச்சியிலை எடுத்து போடுற சட்டியிலே போட்டு வைச்சிருக்கு பாருங்களேன்”ன்னு தீடீரென்னு அந்த சங்கிலியை பார்ப்பது போலே கத்தினான் சாமிகண்ணு. ஊருசனமெல்லாம் அட ஆமாம் இங்கன தானே கெடந்துச்சு, அதுக்குள்ளே ஏய்யா அப்பச்சியை போட்டு அடிச்சீங்க?ன்னு கேட்ட ஒருத்தனை பார்வையாலே மொறைச்சி அப்புறப்படுத்தினான் வேலு.

“வேலு , அப்பன் மூஞ்சிலே தண்ணி தெளிச்சிவிடுடா, சங்கிலி கெடச்சிட்டுச்சுன்னு சொல்லு, இந்த ஆளு மொகத்திலேயும் தண்ணி தெளிச்சி விட்டு எழுப்பு, வாங்குன அடியிலே சுருண்டு போயி கெடக்கு.”

“அண்ணே, அப்பன் எந்திருக்க மாட்டேமே மருகுதுண்ணே, என்ன பண்ணலாம்?”

“அப்பிடியே மெதுவா தோளிலே போட்டு வீடு வரை தூக்கியாந்திரு, இந்தாளை நானு அப்புறப்படுத்திட்டு கடையே சாத்தியாறேன்”

“சாமிண்ணே, சவடமாமு அவமானத்திலே வீடு போயி என்னத்தயாவது செஞ்சுக்கப்போகுதுண்ணே, அப்புறம் நாமே கஷ்டப்படணும்”

“ஏலேய் நீ என்னாத்துக்கு பயப்படுறே? அது அந்த மாதிரி செஞ்சுக்கிருச்சுன்னா நமக்கு தான் நல்லது, செஞ்ச தப்பு வெளியே தெரிஞ்சுருச்சி, அதுதான் இப்பிடி பண்ணிக்கிருச்சுன்னு நாமே தப்பிச்சுக்கலாம், அதுக்காக அவனுககிட்டே நாமே தோக்கமுடியுமா? நம்ம தராதரம் என்னத்துக்கு ஆகுறது?”

“ஹிம் நீ சொல்லுறதும் சரிதான், ஊருக்காரயங்க சவடமாமே கைதாங்கலா தூக்கிட்டு போறனுவே, வா நாமே அப்பிடியே கெளம்பிக்கோவோம்.”

வீட்டில் சவடனை போட்டதும் பர்வதப்பத்தா’கிட்டே எல்லாத்தையும் சொன்னார்கள். அதுவரைக்கும் அமைதியாய் வீடு வரை வந்த சவடன் மொணங்க ஆரம்பித்தான்.

“சொக்கா… என்னை நம்புப்பே நான் எடுக்கல, என்னை பெத்த ஆத்தா மேல சத்தியமா எடுக்கலை’ப்பே, என்னை நம்பு”

“ஏண்டா எருமையை போட்டு அடிக்கிறமாதிரி அடிச்சிருக்காங்க, ஊருக்காரயங்கே நீங்க செவன்னேன்னு வேடிக்கை பார்த்துட்டு கெடந்தீங்களா?”

“எங்கள எங்க கேள்வி கேட்கவிட்டானுக, அவனுகளா பேசிக்கிட்டு அடிச்சி போட்டானுக”

ஏஞ்சாமி ஊருக்குன்னா நீ ஓடியாடி வேலை பார்ப்பியே, இங்கப்பாரு ஒனக்குன்னு ஒன்னு ஆகியும் இப்பிடி பேசிட்டு கெடக்கானுக”ன்னு கண்ணீர் மல்க சவடனுக்கு ஒத்தடம் கொடுக்க ஆரம்பித்தாள் பார்வதத்தா.

துக்கம் கொண்ட ராத்திரி நகரவேமாட்டேன்னு அடம் பிடிச்ச அழுத கணக்கா இருட்டி கெடந்த நேரத்திலே ஒருத்தன் கண்ணு மண்ணு தெரியாமே சவடன் வீட்டுக்கு ஓடியாந்தான்.

“ஆத்தா, அப்பச்சி, வீடிக்காத்தலே சொக்கய்யா விஷத்தை குடிச்சிருச்சி, இப்போதான் வைத்தியர் வந்து மாத்து மருந்து கொடுத்திருக்காங்க, சவடப்பச்சி ஒன்னை பார்க்கனுமின்னு சொக்கய்யா கண்ணீர் விட்டு அழுவுதுய்யா”

சேதி கேட்டு உசுரு போற வேதனையிலும் ஓட்டமாய் ஓடி சொக்கன் வீட்டையடைந்தான் சவடன்.

“அப்பே, என்னோட ராசா, எதுக்கு இந்த மாதிரியெல்லாம் பண்ணே? இது எனக்கு நடந்த அவமாணந்தானே, நீ எதுக்கு ஒனக்கு தண்டனை கொடுத்துக்கிட்டே?”

“இல்லடா, சவடா, என்னோட சவடய்யன் அதெல்லாம் செய்யமாட்டான், காசா இறைச்சு போட்டுருந்தாலும் ஒத்த பைசா எடுக்கமாட்டான்னு என்னாலே சொல்லமுடியலை பார்த்திய்யா? என் பொருள் காணாமே போனதும் ஒன்னையும் சந்தேகத்துக்கு இடமா ஆக்கிட்டேனே? அதுவுமில்லாமே கண்ணுமண்ணு தெரியாமே ஒன்ன வேற போட்டு அடிச்சி போட்டுருக்கானுக இந்த காட்டுமெரண்டி பயலுக, அதெ தடுக்கக்கூட சத்திலேமே போயிட்டேன் பாரு….. “ன்னு ஈனஸ்வரத்திலே அழுதான் சொக்கன்.

“இல்ல ஐயா, நீ சந்தேகப்பட்டுக்கிறது உண்மை இல்லையே, ஏதோ சன்னமா தோணிருக்கு அவ்வளோதானே? ஆனா என்னந்தான் அந்த பயலுக அடிச்சாலும் எனக்கிட்டே இருந்த ஒத்த வார்த்தை நான் எடுக்கலை நான் எடுக்கலை’கிறதே தவிர வேற ஒன்னும் இல்லிய்யா?”

“பொருள் கிடைச்சாலும் ஒனக்கு எனக்கும் போன மானமருவாதியை மீட்டெடுக்க முடியுமா? நீ குத்தமில்லாதவன்னு நிருபிச்சிட்டே, ஆனா நான் பண்ணின தப்புக்கு நாந்தானே தண்டனை கொடுத்துக்கனும், அதுதான் சத்தமில்லாமே செத்து போலமின்னு பூச்சிமருந்தை குடிச்சிட்டேன், ஆனா காளியத்தா எப்பிடியோ பார்த்து கத்திப்பிட்டா”

“ஆத்தி, ஒனக்கு எதுக்குய்யா இந்த தண்டனையெல்லாம்? பயலுக விவரம் தெரியாமேதான் அடிச்சானுக, பெத்தபிள்ள பிறந்தோப்போ நடந்து பழகிறோப்போ தூக்கி கொஞ்சுனோமின்னா நெஞ்சிலே மிதிஞ்சா வலிக்குமா என்ன? அதுதான் மாதிரிய்யா எனக்கு வலிஞ்சது அவ்வளோதான்”

“என்னோட சாமி, நான் இப்போ படுத்திருக்கிற நிலமையிலே இருந்து எந்திரிச்சு நிக்கனுமின்னு ரொம்ப ஆசையா இருக்குடா சவடா, ஒன்னோட காலிலே நெடுஞ்சாண் கிடையா விழுந்து கெடந்து மன்னிப்பு வாங்கினுமின்னு உசுரு துடிக்கிதுடா சவடா’ன்னு கதறியழுத சொக்கனை கட்டி தானும் கண் நனைந்தான் சவடமுத்து.

பூமி நனைக்க வானமும் அந்த தருணத்தைதான் எதிர்பார்த்து கொண்டு இருந்தது.

செப்டம்பர் 17, 2007

விழிகளின் அருகினில் வானம்!

“வினோத் என்னோட கியூபிக்கல்’க்கு கொஞ்சம் வரமுடியுமா?” போனில் கார்த்திக் அழைத்ததும் வினோத்’க்கு சற்றே ஆச்சரியமாக இருந்தது, எதாவது சொல்லவதாக இருந்தாலும் நேராக தன்னோட இடத்துக்கு வந்துதானே பேசுவான்? ஏன் தீடீரென்று அவன் கியூபிக்கலுக்கு கூப்பிடுறான்? கொஞ்சம் பிரச்சினையான விவகாரமா இருக்கும் போலே’ன்னு மனசுக்குள்ளே நினைத்துக்கொண்டு கார்த்திக் கியூபிக்கல் சென்றடைந்தான் வினோத்.

“வினோத், நேத்து நைட் நம்ம கிளைண்ட் போன் செஞ்சு காச்சி எடுத்துட்டாண்டா! நம்ம அரைமண்டயன் ஆன்சைட் கோ-ஆர்டினர்’ம் சேர்ந்துக்கிட்டு ஜால்ரா கொட்டிட்டான்! கிளைண்ட் எதிர்பார்த்த அளவுக்கு நம்ம ப்ராஜெக்ட் குவாலிட்டி கொடுக்கலை! அதுவும் டைம்க்குள்ளே எந்த டெலிவரியும் தரலை! இதுவரைக்கும் பே பண்ணின அமெண்ட் எல்லாம் வேஸ்டான மாதிரி ஃபீலிங்’ன்னு நம்ம சீனியர் மேனஜர்’யையும் வைச்சிகிட்டே போன் கான்பிரன்ஸ்’லே சொல்லிட்டான்.”

“என்னாடா கார்த்தி சொல்லுறே? இப்பிடியெல்லாம் அவன் பேசுற அளவுக்கு நாமே என்ன தப்பு பண்ணினோம்? நம்ம டெலிவரி’யெல்லாம் சில சமயங்களிலே லேட்டா ஆனாலும் சரியாதான் அவங்க கேட்கிற எல்லாமே செஞ்சு அனுப்பி இருக்கோமே?”

“ஹிம் சம்திங் பிராப்ளம் இன் அவர் டீம் வொர்க், நான் இதுக்கு யாரையும் பிளேம் பண்ண விரும்பலை! கார்த்தி இன்னிக்கு ஆப்டர் லஞ்ச் மீட்டிங் அரெஞ்ச் பண்ணமுடியும்மா? இதே அங்க வைச்சி டிஸ்கஸ் பண்ணிக்கலாம்…”

“ஹிம் ஓகே’டா அரெஞ்ச் பண்ணிறேன்”ன்னு குழப்பங்களும் ஆச்சரியங்களும் கலந்த உணர்ச்சியுடன் தன்னிடம் வந்து சேர்ந்தான் வினோத்.

வினோத்’ம் கார்த்தியும் ஓரே பள்ளியிலிருந்து இன்ஜினியிரிங் காலேஜ் வரை ஒன்றாக படித்து சென்னை தனியார் மென்பொருள் நிறுவனமொன்றில் கேம்பஸ் இண்டர்வீயூ மூலம் வேலை பெற்றனர். அதே கம்பெனியிலே நாலு வருடங்களுக்கு மேலாக வேலை பார்த்து இருவரும் அவர்களின் ப்ராஜெக்ட் லீடர் என பதவி உயர்வு பெற்றுள்ளனர். கார்த்திக் வினோத்’ஐ விட ஒரு படி மேலே இருந்தாதாலும் அவர்களின் க்ளையண்ட் ப்ராஜெக்ட்’லே ஆரம்பத்திலே இருந்தாலும் இதில் மெயின் லீட்’ஆக இருந்தான்.

“Friends, we got bad feedback from client side. i don’t know why that’s caused, Please ensure our job is need to be done before dead line.”ன்னு பேசிட்டு கன்பரெண்ஸ் ஹால்’லிருந்து வெளியேறி விட்டான் கார்த்திக்.

மீட்டிங் முடிந்ததும் கார்த்திக் மிகவும் சோர்ந்து உட்கார்ந்து இருந்ததே கண்டதும் வினோத்’க்கு ரொம்பவே வருத்தமாக இருந்தது, சின்னவயசில் இருந்து அவனுடன் பழகிவந்தவன் முறையில் மிகவும் அக்கறையுடன் அவனை பற்றிய நினைவலைகளில் மூழ்கினான். ஆறாம் வகுப்பிலிருந்து காலேஜ் இறுதியாண்டு வரை ஒன்றாக ஹாஸ்டலில் ஒன்றாக தங்கியவன் என்ற முறையில் அவனை பற்றி அனைத்தும் தெரிந்து வைந்திருந்தான்.கார்த்திக் சிறுவயதிலே தன்னுடைய தாய் இழந்திருந்ததினால் அவரது அப்பா சென்னையில் ஹாஸ்டல் இணைந்த பள்ளியொன்றில் சேர்ந்து விட்டுருந்தார். கார்த்திக்கு ஐந்து வயது வித்தியாசமுள்ள ஒரே ஒரு அக்காவிற்கும் இவர்கள் பிளஸ்டூ படிக்கும் போது கல்யாணம் ஆகிவிட்டது. யாரிடம் அநாவசியமான பேச்சோ, எதாவது கேளிக்கை பொழுதுப்போக்கிலும் சற்றும் ஆர்வமாய் இல்லாமால் படிப்பில் கவனமாகவே இருந்து பள்ளிக்கூடத்திலேயும்,கல்லூரியிலும் முதல் மாணவனாக தேறியிருந்தான். வேலையிலும் சேர்ந்ததிலே இருந்து கவனமாகவும் மிகவும் ஆர்வத்துடன் இருந்து வேலை செய்த காரணத்தினாலும்,ப்ராஜெக்ட் விஷயமாக கிட்டத்தட்ட மூன்று வருடங்களில் வெளிநாட்டில் வேலை செய்தானலும் மிகவும் விரைவாக அவனது டீம்’க்கு லீட்’ஆக ஆக்கப்பட்டான். கார்த்திக் தன்னுடைய வாழ்க்கையில் தோல்வியை சந்திறாத காரணத்தினாலே இந்த ஒரு விஷயத்துக்கு கூட மனதொடிந்து இருக்கிறான் என வினோத் முடிவுக்கு வந்தான்.

“வினோ! ஏன் என்னாச்சு? ஏன் கார்த்தி ரொம்ப அப்செட்’ஆ இருக்காங்க? ரொம்ப பிரச்சினையா ஆச்சா?’ன்னு தாமரை குரல் கேட்டு நிமிர்த்தான் வினோத்.

“ஏன் நீ இந்த உலகத்திலே தான் இருந்தே? காலையிலிருந்தே இதேபத்தி தானே பேசிட்டு இருக்கோம், அப்புறமா என்னா வந்து பிரச்சினையா? அப்செட்டா’ன்னு குசலம் விசாரிக்கிறே?”

“ஏய்? என்ன நக்கலா? என்ன நடத்துச்சுன்னு கேட்டேன்? கார்த்தி ஏன் அப்செட்’ன்னு கேட்டேன்? அதுக்கு ஏங்க நீங்க சலிச்சிக்கீறிங்க?”

“அம்மா தாயே! ஒனக்கு அவனை பத்தி ஏதாவது ஒன்னு தெரிஞ்சுக்கனும்? அதுக்கு என்னாவெல்லம் சொல்லி கேட்கிறே? ஒன்னோட ஆளை நேத்து நைட் மீட்டிங்’லே வெள்ளைக்காரன் தொவைச்சி காயப்போட்டுட்டான், அதுவுமில்லாமே நம்ம டீம் ப்ராஜெக்ட் பத்தி டிஸ்சாடிஸ்பிகேசன் வேற சொல்லிருக்கான், அதே கேட்டதிலே இருந்துதான் பய பயங்கர அப்செட், காலை டிபன் சாப்பிட்டானா’ன்னு கூட தெரியலை? என்னா கேட்டாலும் கொஞ்சம் தனியா இருக்கவிடுன்னு அங்கே உட்கார்ந்து இருக்கான்…”

“ஹிம் நீங்க போயி அவரே சாப்பிட கூட்டிட்டு போங்களேன் பிளிஸ்!”

“ஆமாம் நான் சொன்னதும் கேட்கப்போறானா? அவன் அப்பிடிதான் சின்னவயசிலே இருந்தே எந்த தோல்வியோ இல்ல அந்தமாதிரியான சூழ்நிலையிலோ வாழ்ந்து பழகதாவன்! அதுதான் ஒருத்தர் ஒன்னு சொன்னதும் பயலுக்கு பயங்கரமா பொத்துக்கிட்டு வந்து மூஞ்சிய தூக்கி வைச்சிட்டு இருக்கான். நாமே சொல்லி கேட்கமாட்டான், அவனோட அக்கா விஜிக்கா’வுக்கு போன் பண்ணி சொன்னதான் சரியா இருக்கும்”

“ஹிம் பண்ணிசொல்லுங்க… யாராவது கொஞ்சம் ஆறுதலா பேசினாதான் அவருக்கும் நல்லாயிருக்கும்…”

“அநியாத்துக்கு அவன் மேலே அக்கறை எடுத்துக்கிறியே’ம்மா! ஆனா அவன் ஒன்னை கொஞ்சம்கூட மதிக்கமாட்டேன்கிறான்! நீ அவனை லவ் பண்ணுறேன்னு கூட சொல்லிட்டேன்! அதுக்கும் அவன் மசியிறே மாதிரி தெரியலையே! இவனுக்கு எப்போ கல்யாணம் ஏற்பாடு பண்ணலாமின்னு அவங்க அக்கா போன் பண்ணுறோப்பேயும் கேட்பாங்க, இந்த மடையன் எதுக்கும் மாட்டேன்கீறான். என்னந்தான் மனசிலே வைச்சிருக்கான்னு தெரியலை?”

“எனக்காக ஒரு ஹெல்ப் பண்ணுவீங்களா இல்லயா?? அவங்களே கூப்பிட்டு போயி சாப்பிட வைங்க”

“உத்தரவு மகாராணி!”

“டேய் கார்த்தி! இன்னும் நீ நார்மல் ஆகலையா? அடுத்த மீட்டிங்’குள்ளே நாமே அவங்க கொடுத்த ரீக்வெயர்மெண்ட் முடிச்சிறாலாம்.. இப்போ வந்த சின்ன ஃபீட்-பேக் இப்பிடி ஃபீல் பண்ணிட்டு இருக்கீயே?”

“இல்ல வினோத்! அந்த க்ளைய்ண்ட் எப்பவும் நம்மக்கிட்டே நேரா பேசமாட்டான், அங்க இருக்கிற கோ-ஆர்டினேடர்’கிட்டே ஏதாவது சொல்லுவான். நாமே அவன்கிட்டே இருந்து இன்புட் வாங்கி வேலை செஞ்சுக்கிட்டு இருந்தோம். ஆனா இது எனக்கு என்னோமோ நம்ம ப்ராஜெக்ட்’ஐ கேன்சல் ஆகிறமாதிரி இருக்கு? இது எங்க நடந்த தப்புன்னு தெரியலை. அந்த கோ-ஆர்டினடர் கொல்டி எதாவது சொதப்பிட்டனா’னு தெரியலை? நாமே அவன்கிட்டே எதுவும் தகறாறுகூட பண்ணலேயே? நம்ம சீனியர் மேனஜர் கான்பரெண்ஸ்’லே இருக்கிறப்போ வந்த கம்பைளண்ட்’ஐ நினைச்சி ரொம்ப ஃபீல்’ஆ இருக்கு?”

“கார்த்தி.. இதுதான் உன்க்கிட்டே இருக்கிற பிரச்சினை, ஒரு சின்னவிஷயமானலும் சரி, பெரிய விஷயமானலும் சரி, ரொம்பவே போட்டு மனசை குழப்பிக்கிறே? கொஞ்சம் ஃபீரியா வீட்டு அப்புறம் பார்ப்போமின்னு எதையும் செய்யமாட்டேங்கிறே? இப்போ ஒன்னும் இந்த ப்ராஜெக்ட் விட்டுட்டு நீ போ! வேற ரீசோர்ஸ் வைச்சி நாங்க பார்த்துக்கிறோமின்னு சொல்லலையே?”

“ஓ அப்பிடி வேற சொல்லிருக்கனுமின்னு சொல்லுறீயா?”

“அடேய் எல்லாத்தையும் ரொம்ப சீரியஸா எடுத்துக்காதே’டா! இப்போ இது இல்லாமே போச்சுன்னா நம்மாளே உசுரு வாழமுடியாதுன்னு நினைக்கிறீயா? இல்லல்லே? என்னை பொறுத்தவரைக்கும் இது நம்மாளோட மிஸ்-அண்டர்ஸடாண்டிங்’லே வந்தமாதிரி தான் தெரியுது! போன மீட்டிங்’லே அந்த கொல்டியோட பிகேவியர் சரியில்லை! அவந்தான் ஏதோ சொல்லிருக்கான்!”

“what ever it maybe! நம்மக்கிட்டேயும் தப்பு இருக்குல்ல! டெட்-லைன் முன்னாடி ஏதாவது நாமே டெலிவரி பண்ணிருக்கோமா சொல்லு? இவ்ளோ பிரச்சினை வைச்சிக்கிட்டு அவனை நாமே எதுக்கு தப்பு சொல்லனும்?”

“சரி’டா.. அது எல்லார் மேலேயும் இருக்கிற தப்புதானே? நீ ஏன் அதுக்காக உனக்கு மட்டும் தண்டனை கொடுக்கிறே? நீ மட்டும் தண்டனை அனுவிக்கிறது இங்கயிருக்கிற முக்கியமான ஆளுக்கு பிடிக்கலை’லே?”

“என்ன??? யாரு உன்கிட்டே அந்த நெட்டை கொக்கு தாமரை வந்து கவலை பட்டாளா என்னா??”

“ஹிம் ஆமாம் இப்போ என்னாடா? அவந்தான் உன்னை பார்த்து கவலைப்படுவா? வேற யாரு இருக்கா இங்க பக்கத்திலே?”

“ஏன் நீ என்னை பத்தி ஃபீல் பண்ணமாட்டியா?”

“அடேய் நானாந்தானே வந்து உன்கிட்டே பேசிட்டு இருக்கேன். ஒவ்வொருத்தவங்களும் ஒவ்வொருவிதமான அக்கறை செலுத்துவாங்க… எல்லாரடேயும் அன்பையும் வாங்கினுமிடா! உனக்கு எவ்வளவோ சொல்லிப் பார்த்தாச்சு! நீ என்னந்தான் மனசிலே நினைச்சிட்டு இருக்கே’னு யாருக்கும் புரியலை! விஜிக்கா போன் பண்ணுறப்போ எல்லா டைமிலும் அவனை பார்த்துக்கோ! எப்போ கல்யாணமின்னு அவன்கிட்டே பேச்சு எடுக்கலாமின்னு உன்னை வேற என்னை நோட்டம் பார்க்க சொல்லிருக்காங்க”

“ஓ! அக்கா இந்த வேலையெல்லாம் உன்னை பார்க்க சொல்லிருக்கா? எனக்கே அந்த ஐடியா வந்தா சொல்லுறேன்னு சொல்லிருக்கேன்’லே! அப்புறமென்னா.. சும்மா சும்மா எப்பவும் அதை பத்தியே பேச்சு”

“சரி வெளக்கெண்ணே… இப்போ நீ வர்றீயா! சாப்பிட போகலாம்”

வினோத் பேச்சை மீறாத கார்த்திக் அவனுடன் புட்கோர்ட்’க்கு நடக்கலான். வினோத்’ம் அவன் மனதிற்குள் கார்த்திக் நாமே சொன்னதை கேட்டுக்கிறான், இவனை சீக்கிரம் கல்யாணத்துக்கு சம்மதம் பண்ணவைக்கனுமின்னு நினைத்து கொண்டான்.

“கார்த்திக் உனக்கு வேணுமிக்கிறத நீ ஆர்டர் பண்ணிக்கோ! நான் உன்னை விட்டு சாப்பிட்டுட்டேன், எனக்கு ஒரே ஒரு லைட் டீ மட்டும் ஆர்டர் பண்ணு. போன் பண்ணிட்டு வந்திறேன்”

“ஹலோ மகாராணி, தாமரை செல்வி, உன்னோட ஆளு சாப்பிட ஆரம்பிச்சாச்சு! இப்பவே மணி 4′க்கு மேலே ஆச்சு, நீயும் தயவு செய்து சாப்பிடு மகாராணி”

“வினோத்… யாருக்கிட்டே பேசிட்டு வர்றே? டீ வந்துருச்சு! எடுத்துக்கோ”

“நான் யாருக்கிட்டேயோ பேசினா உனக்கு என்னாடா? பேசாமே சாப்பிடு!”

இதுக்கு மேலே என்ன கேள்விகேட்டாலும் பதில் சொல்லமாட்டான்’ன்னு கார்த்திக்’க்கு நல்லாவே தெரியும். சாப்பிட்டு முடித்து ஆபிஸிக்குள் அவனது அக்கா மொபலில் அழைந்ததும் விரைந்து தன்னுடைய இடத்தில் அமர்க்கிறான்.

“ஹலோ அக்கா சொல்லு! நீ எப்பிடிருக்கே? மாமா எப்பிடிருக்காரு? பிள்ளைகளெல்லாம் நல்லா இருக்காங்க இல்ல?”

“எல்லாரும் நல்லா இருக்கோம்! நீ எப்பிடி இருக்கேன்னு சொல்லு? ஆபிஸிலே ஏதோ பிரச்சினை, நீ சாப்பிடமே கூட இருக்கேன்னு வினோ சொன்னான்? உண்மையா அது?”

“மடையன் என்னாத்தயாவது சொல்லுவான்! ஹிம் கொஞ்சம் பிரச்சினைதான், அதுதான் லேட்டா சாப்பிட போனேன், இப்போதான் சாப்பிட்டே வந்தேன், நீ சரியா கால் பண்ணுறே?”

“எதுக்குடா இவ்வளோ லேட்’ஆ சாப்பிடுறே?அதுக்குதான் காலகாலாத்திலே கல்யாணம் பண்ணிக்கோடா’ன்னு சொன்னா கேட்கவே மாட்டெங்கிறே? என்னந்தாண்டா உன்னோட மனசிலே நினைச்சிட்டு இருக்கே? நாங்க எது சொன்னாலும் நீ கேட்கவே கூடாதுன்னு முடிவு பண்ணி வைச்சிருக்கியா?”

“அக்கா! இப்போ எதுக்கு இவ்வளோ கோவப்படுறே? நாந்தான் எனக்கு அந்த ஃபீலிங் வந்ததும் சொல்லுறேன்னு சொல்லிருக்கேன்’லே? பின்ன என்னா?”

“ஹிம் இப்பிடிதான் கடைசி ரெண்டு வருசமா சொல்லிட்டு இருக்கே? நானும் மலைக்கோட்டை சாரதாஸ் போறப்போலாம் இந்த பட்டுச்சேலைய தம்பி கல்யாணத்துக்கு எடுத்துக்கலாமின்னு நினைச்சிட்டு வர்றேன், இப்பிடியே இந்த ரெண்டுவருஷமா எல்லா டிசைன்’ம் போயிருச்சு..”

“உன்னோட கஷ்டம் உனக்கு? வேற என்னத்த சொல்லுறது?”

“ஆமாம் எந்தம்பி’க்கு கல்யாணம் பண்ணி வைக்கவேணாமா? அப்பா கூட உன்னோட கல்யாணத்தை பத்திதான் எப்பவும் நினைச்சிட்டு இருக்காரு. அப்புறமிடா வர்றபோற பொண்ணுக்கு எடுக்கப்போற பட்டுச்சேலை பார்டர்’டோட எனக்கு கொஞ்சம் பெருசா எடுக்கனுமின்னு இப்பவே சொல்லிக்கிறேன்’ப்பா!”

“எடுக்கலாம்! எடுக்கலாம்…. காஞ்சிப்புரத்துக்கே போயி நெய்ய குடுத்தே வாங்கலாம்.. இப்போ நான் வேலை பார்க்கபோறேன். போனை வைச்சிரு!”

“டேய் கார்த்தி! விஜிக்க்கா போன் பண்ணாங்களா?”

“வாடா வா! நீ தான் போன் பண்ணி எல்லாத்தையும் சொன்னியா?”

“ஆமாம், நாங்கெல்லாம் சொல்லி நீ கேட்டுற போறியா என்னா? அதுதான் போன் பண்ணி சொன்னேன்!”

“நல்லாந்தான் வேலை பார்க்கிறே? இப்போ நான்மட்டும் இன்னும் சாப்பிடல’ன்னு சொல்லிருந்தேன்னா அக்கா இந்நேரம் அழுதுருக்கும்! நான் இப்போதான் சாப்பிட்டு உள்ளே வர்றேன்னு சொன்னதும் வழக்கம்போலே சாரதாஸ், பட்டுச்சேலைன்னு கல்யாணப் பேச்சை எடுத்துட்டு போனை வைச்சிருன்னு வைச்சிருச்சு!”

“கார்த்தி இந்த வாரம் சனிக்கிழமை எதுவும் பிளான் வைச்சிருக்கியா என்ன? ஃபீரியா இருந்தா சொல்லு! உன்னோட அபார்மெண்ட்’க்கு நான் வர்றேன்”

“வீக்கெண்ட் ஊருக்கு போலாமின்னு இருந்தேன், சரி நீ வா, நான் சாயங்காலத்துக்கு மேலே ஊருக்கு போயிக்கிறேன்.”

அந்த வார சனிக்கிழமையில் கார்த்திக் குடியிருக்கும் அபார்ட்மெண்ட்’க்கு சென்றடைந்தான் வினோத்.

“கார்த்தி வந்த விஷயத்தை நேரடியாகவே கேட்டுறேன்! நீ கல்யாணம் பண்ணிக்கிறதிலே என்ன பிரச்சினை?”

“வினோத் எவ்வளவு தடவை’டா நான் ஒரே மாதிரி பதிலை திரும்ப திரும்ப சொல்லிட்டே இருக்கிறது??”

“ஏன் அமெரிக்கா போனப்போ எதாவது வெள்ளக்காரி’கிட்டே மனசை கொடுத்துட்டு வந்துட்டியா? அதுதான் பத்து பக்கத்திலே யாருக்கோ மெயில் அனுப்பிட்டு இருக்கீயா டெய்லி?”

“ஹிம் மண்ணாங்கட்டி! அதெல்லாம் அங்க பழகின ஃபிரண்ட்ஸ்’க்கு அனுப்புறதுடா? இதெல்லாம் சந்தேகப்பட்டு கேட்பீயா நீ?”

“பின்ன என்னாடா? தேய்ச்சு போன ரிக்கார்ட் மாதிரி ஒரே வார்த்தையே திரும்ப திரும்ப சொல்லிட்டு இருந்தா? கேட்க்கிற எங்களுக்கு வெறுப்பா ஆகாதா? உனக்கு உண்மையிலே தாமரையே பிடிக்கலையா? ஸ்டெரைக்ட் ஃபார்வேட்’ஆ சொல்லு?”

“இதென்னா தூது வந்து கேட்கிறமாதிரி இருக்கு?”

“ஆமாம் அப்பிடியே வைச்சிக்கோ?”

“சரி அப்போ நானும் அப்பிடியே பதில் சொல்லிக்கிறேன்…. இப்போதைக்கு எதுவும் என்னாலே பதில் சொல்லமுடியாது!”

“அதான் ஏன்னு சொல்லு?”

“என்னா ஏன் ஏன்னு கேட்டா நான் எப்பிடி வளர்த்தேன்னு உனக்கு நல்லாவே தெரியும்? என்னோட பத்துவயசிலே அம்மா இறந்துட்டாங்க, எங்க அக்கா’வுக்கு அப்போ பதினஞ்சு வயசு, அவளுக்கும் ஒன்னும் தெரியாது, ரெண்டு பேரையும் ஹாஸ்ட்லிலே சேர்த்து எங்கப்பா படிக்க வைச்சாரு! நீயும் நானும் ஓரே ஹாஸ்டலிலே தானே தங்கி படிச்சோம், எனக்குதான் அம்மா இல்ல, உனக்கு ரெண்டு பேரு இருந்தும் ஏன் ஹாஸ்ட்லிலே சேர்த்துவிட்டு மாசமாசம் வந்து உன்னை பார்த்துட்டு போறங்கன்னு நினைப்பேன், அப்போல்லாம் உங்கம்மா என்னை பார்த்து சிரிப்பாங்க பாரு, அதை எப்பவும் நினைச்சிட்டு இருப்பேன், லீவுலே ஊருக்கு போறப்போ அக்கா கூட இருக்கிறப்போ அவகூட இருக்கிறப்போயும் எங்க அம்மா பக்கத்திலே இருக்கிறமாதிரி நினைச்சிக்குவேன்.”

“சரி கார்த்தி, நீ அம்மா இழந்ததினாலே அந்த வருத்தம் இருக்குன்னு சொல்லுறே? சரி அதுக்கும் கல்யாணம் வேணாமின்னு சொல்லுறதுக்கும் என்னாடா காரணம் இருக்கு?”

“அதுதான் சொல்லுறேன், நான் சின்னவயசிலே இழந்த அந்த தாய்மை உணர்வை என்னோட மனைவி வந்து தரனுமின்னு எதிர்பார்க்கிறேன்! அவ்வளவுதான்”

“கார்த்தி இங்கதான் நீ தப்பு பண்ணுறே? தாய்மை தர்ற பொண்ணு கிடைக்குமின்னு காத்திருக்கிறேன்னு சொல்லுறது தப்பான எண்ணமிடா! ஆணும் பொண்ணும் சமமின்னு சொல்லிக்கிற பொண்ணுகளுக்கிட்டே அவங்க செலுத்துற பாசத்திலே நாமே சமம்’ஐ இல்லாடா? நீ அன்னிக்கு சாப்பிடலைன்னதும் ரொம்பவே வருத்தப்பட்ட தாமரையும் சரி, நீ சொன்னமாதிரி இன்னும் சாப்பிடமே மட்டும் இருந்தேன்னு சொல்லிட்டா விஜிக்கா அழுதுருக்குமின்னு சொன்னியா அதெல்லாம் பாசமா இல்ல உன்மேலே வைச்சிருக்கிற அக்கறையினாலோ வந்தது இல்லாடா? அவங்ககிட்டே இயற்கையா இருக்கிற அந்த தாய்மையான பண்பினாலே தாண்டா”

“உன்னோட வார்த்தைக்களை ஒத்துக்கிறேன் வினோ! ஆனா தாமரை மேலே எனக்கு அப்பிடியொன்னும் ஈர்ப்பு வரலையே”

“அடபாவி இதுக்கொரு லெக்சர் செண்டி டயலோக்’கோட கொடுக்கனுமா என்ன? தகரடப்பா’க்குள்ளே கூழாங்கல்லை போட்டு உருட்டுனாப்பலே குரலு, பனைமரத்திலே கால்வாசியே வெட்டி எடுத்துட்டு அதுக்கு துணி மாட்டி விட்ட மாதிரி உருவத்தை வைச்சிக்கிட்டே ஒன்னை ஒரு பொண்ணு லவ் பண்ணுது’ன்னா அது பெரிய விஷயமில்லயா?

“அடபாவி இப்பிடி கலாய்க்கீறியே?”

“ஹிம் அதுதான் சொல்லுறேன், அந்த பொண்ணே எவ்வளோ தூரம் இறங்கி வந்து உன்னயே விரும்புறேன்னு சொல்லுறா! நீ ரொம்பதான் பிகு பண்ணிட்டு இருக்கே? பொண்ணே நம்மக்கிட்டே சொல்லிட்டா நாமே ஆம்பிள்ளதனத்தை காட்டுனுமின்னு மாட்டேன்னு ஒரு வேளை சொல்லுறீயோ?”

“சே சே அதெல்லாம் இல்ல! இப்போதைக்கு என்ன சொல்லுனுமின்னு தோணலையே எனக்கு”

“அதுதாண்டா நீ சொன்னமாதிரி பாசத்தோட அந்த பொண்ணு அன்னிக்கு டைம்’க்கு வாங்க சாப்பிட போலமின்னு கூப்பிட்டா அவளை நீ போயி சாப்பிடுன்னு சொல்லிட்டு வீம்புக்கென்னே ஒரு மணி நேரம் கழிச்சி போவியே? அவ என்னிக்காவது சமைச்சி கொண்டு வந்து சாப்பிடுங்கன்னு சொன்னா இல்ல இப்போ பசியில்லை திருப்பி விடுவே! முதலிலே இதெல்லாம் பார்க்கிறப்போ உன்னை கண்டா அவளுக்கு கோவந்தான் வந்துச்சாம், ஆனா இப்போல்லாம் ஒரு குழந்தையாட்டம் தான் நீ அடம்பிடிக்கிறேன்னு சமாதானமா போறாளாம்”

“என்னை குழந்தைன்னு யாரு சொன்னது?”

“எல்லாமே அந்த நெட்டை கொக்கு தான்”

“ஹிம் அவளுக்கு அவளோ சேட்டையா? நான் வேணாமின்னு சொன்னா அது குழந்தை மாதிரி அடம்பிடிக்கிறதா என்ன?”

“பின்னே… அன்னிக்கு ஆபிஸிலே சின்ன பிரச்சினைக்கு நீ டென்சனா ஆகி உட்கார்ந்து இருந்தோப்பே நீ நார்மலா ஆகிருனுமின்னு அவ தவிச்ச தவிப்பு இருக்கே! தட்டிலே வைச்ச சோத்தை எல்லாத்தயும் நம்ம குழந்தை சாப்பிடறனுமின்னு தவிக்கிற அம்மா’வோட எக்ஸ்பிரஷ்ன்ஸ்’டா! அதெல்லாம் எங்க உனக்கு தெரியப்போகுது?”

“டேய் வினோ! எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிரு போதும்! இதென்னும் நான் மாட்டிக்கிட்டு முழிக்கிறமாதிரி நீயும் அனுபவிடா’ன்னு சொல்லுறமாதிரி இல்லயே?”

“ஆஹா சரியான டைமிலே ஞாபகப்படுத்திட்டே? நான் இப்பவே கிளம்புறேன், அம்மணி வேற மேட்னி ஷோ போனுமின்னு சொன்னா? எதாவது தீயேட்டருலே டிக்கட் கிடைக்குதான்னு பார்த்துட்டு அவளை போயி கூட்டிட்டு போகனும்…”

“ஹிம் இந்த கேள்வி கேட்டதும் தான் உன்னோட ஆளு ஞாபகம் வருதா என்ன? சரி நீ கிளம்பு… நீ இருந்தா இன்னிக்கு டி-நகர் அஞ்சப்பர்’லே போயி லஞ்ச் சாப்பிடலாமின்னு இருந்தேன், உனக்குதான் முக்கியமான வேலை இருக்கே?”

திங்கள்க்கிழமை அலுவலகம் வந்ததிலிருந்து வீனோத்’க்கு வெகு ஆச்சரியம் காத்திருந்தது, எவ்வளவு சொல்லியும் லைட் கலர் சட்டை போடவே மாட்டான், இன்னிக்கு போட்டு வந்துருக்கான், அதுவுமில்லாமே என்னிக்கும் இல்லாமே இன்னக்கு காலையிலே ஹெட்-செட் மாட்டி பாட்டு கேட்டுக்கிட்டு இருக்கான்.

“ஹாய் வினோ, தாமரை எங்கடா இருக்கா? ஓ இங்கதான் இருக்கீங்களா மேடம், வாங்க காப்பி சாப்பிட புட்-கோர்ட் போலாமா?”

“என்னாச்சு இவருக்கு, இன்னிக்கு தீடீரென்னு வெளியே எல்லாம் கூப்பிடுறார்ன்னு வெகுஆச்சரியமாய் கிளம்பினாள் தாமரை.

“ஹலோ அக்கா! நாந்தான் கார்த்தி பேசுறேன், நாமே சீக்கிரமே உனக்கு காஞ்சிப்புரம் போயி பட்டுச்சேலை நெய்ய குடுத்துறாலாம்”ன்னு சொல்லி மகிழ்ச்சியாக தாமரையுடன் புட்-கோர்ட்க்கு விரைந்தான் கார்த்திக்.

அவனுடைய சிஸ்ட்ம் ஹெட்-போனில் மெல்லிதாய் காற்றில் கரைந்து கொண்டிருந்ததொரு கானம்.

விழிகளின் அருகினில் வானம்
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்
இது ஐந்து புலன்களின் ஏக்கம்
என் முதன்முதல் அனுபவமோ?

ஜூலை 11, 2007

மாணிக்க மலர்

“ஏண்டா எந்திருடா! இன்னிக்கு ஆபிஸிலே மீட்டிங் இருக்குன்னு 9 மணிக்கெல்லாம் போறேன்னு நைட் தூங்குறப்போ சொல்லிட்டு இப்போ 8 மணி வரை தூங்கினா எப்பிடி??”ன்னு ரூம்மேட் கத்தின கத்துலே எழுந்து உட்கார்ந்தான் சந்துரு.

“இன்னும்தான் ஒன் அவர் இருக்குலே! அதுக்குள்ளே கத்தி ஊரை கூட்டுறே? டீ போட்டாச்சா?”

“இவரு பெரிய தொரை ! மகாராசா எழுந்திருச்சதும் பெட் காப்பியோட எழுப்பி விடனுமா? அப்பிடியே பாத்ரூமை பார்த்து ஓடி போயிரு! சீக்கிரம் குளிச்சிட்டு கெளம்பு! நாங்கெல்லும் ஆபிஸிக்கு போகனும்!”

நண்பன் வினோத் போட்டு வைத்த டீ’யை குடித்து விட்டு காலைக்கடன்களை முடித்து விட்டு ஆபிஸிக்கு கிளம்பினான் சந்துரு.

“ஹலோ! நான் இப்போ மீட்டிங்’லே இருக்கேன்! நான் அப்புறமா கால் பண்ணுறேன்!”

“என்னடா சந்துரு! காலநேரமில்லாமே வூட்பீ கூடதான் போனிலே பேச்சுன்னா! மீட்டிங்’லே கூடவா”ன்னு கிண்டல் பண்ணிய கொலிக்’ஐ கடுப்புடனே பார்த்தான்.

“ஏய் நைட் தான் போனிலே மீட்டிங் முடியறதுக்கு 10 மணி ஆகுமின்னு சொன்னேன்’லே! அப்புறம் எதுக்கு கட் பண்ண பண்ண திரும்ப கால் பண்ணுறே???”

“ஐயோ அது எனக்கு தெரியுங்க! காலையிலிலே உங்க அம்மாவும், அக்காவும் போன் பண்ணினாங்க! ஒங்க சித்தப்பா பொண்ணு ரூபி’க்கு ரொம்ப காய்ச்சல் அடிக்குதாம், நேத்து மதியத்திலே இருந்து ஒன்னுமே அவ சாப்பிடலையாம்! உங்கக்கிட்டே சொன்னாங்களா?” இது சந்துருவின் வருங்கால மனைவி சுதா.

“நேத்து மதியம் அக்கா போன் பண்ணுறப்போ சொன்னுச்சு! நான் இந்த வாரம் சனி,ஞாயித்துக்கிழமையிலே வந்து பார்க்கிறேன் சொல்லிருந்தேனே! இப்போ எப்பிடி இருக்காளாம்?”

“அதுதான் தெரியலைங்க! நான் போய் பார்த்துட்டு மதியவாக்கிலே போன் பண்ணிச்சொல்லுறேன்! இப்போ போயி வேலையே பாருங்க”

சுதா போன் பண்ணியதில் இருந்து சந்துருவுக்கு வேலை ஒன்றுமே ஓடவில்லை. ரூபி என்று செல்லமாக அழைக்கப்படும் ரூபிணி அவன் சித்தப்பா’வின் மூன்றாவது பொண்ணு. பன்னிரண்டு வயசும், எட்டு வயசும் ரெண்டு பொண்ணுங்க இருக்கும்போது மூணாவது பையன் கொஞ்சம் தள்ளி பிறந்தா நல்ல சுகப்போகத்தை கொடுப்பான் அந்த வாரிசு’ன்னு ஏதோ ஜோசியர் சொன்னாங்க’கிறதினாலே சித்தி கர்ப்பமா இருங்கான்னு அக்கா அவன்கிட்டே சொன்னப்போ சந்துரு’வுக்கு பத்திக் கொண்டு வந்தது.

“என்னாக்கா ஒனக்கே ரெண்டு பசங்க இருக்காங்க! அதுவுமில்லாமே எனக்கு கல்யாணம் வேற பண்ணப்போறேன்னு சொல்லிட்டு இருக்கீங்க? இப்போ போயி நம்ம சித்தப்பா,சித்திக்கு இன்னொரு குழந்தையா?”

“அதுனாலே என்னாடா? நம்ம எல்லார் வீட்டிலேயும் ஆம்பிளை பசங்க இருக்கீங்க! அந்த சித்தப்பா வீட்டிலே இல்லலே? நீ எதுவும் வாயை வைச்சிட்டு சும்மாயிருக்காமே என்னத்தயாவது வெடுக்கென்னு சொல்லிறாதே?” இப்பிடி அக்கா சொன்னப் பிறகு அதை பற்றி பெரிதாக அவன் ஒன்னும் எடுத்துக் கொள்ளவில்லை.

எல்லாரும் ஆண் பிள்ளை என எதிர்பார்த்து பிறந்தது பெண் பிள்ளை என்று தெரிந்து சித்தி ஆஸ்பத்திரியிலே கத்தி அழுதுதை அம்மாவும் மூக்கு சிந்திக்கிட்டே சொன்னப்போ ஒன்னுமே தோணவில்லை அவனுக்கு! அவள் பிறந்த மறுநாள் அப்பா போன் பண்ணி அவள் இராசி,நட்சத்திரம், பாதம் எல்லாமே தன்னோடது ஒன்னா இருக்குன்னு சொன்னப்போது தான் மிகவும் ஆச்சரியமாகவும்,பாசமும் பொங்கி வர அவளை பார்ப்பதற்கு பெங்களூரூலே இருந்து மதுரை போய் பார்த்து வந்தான். பளிச்சென்னு முகக் களையும் அழுத்தம் திருத்தமான மூக்கு முழியுமான குழந்தை அவன் மனதிலே பளிச்சென்னு ஒட்டிக்கொண்டது. அதன் பின்னர் ஊருக்கு செல்லும் பொழுதெல்லாம் இவனை பார்த்ததும் அவள் அழத் தொடங்குவதும், சித்தியும்,தங்கைகளும் “ஒன்னை ஏதோ வேத்து ஆளா நினைக்கிறா போல”ன்னு சொல்லுவதும் அடுத்தமுறை வரும் பொழுது நல்லா பழகிறலாமின்னு தனக்கு தானே சமதானப்படுத்தியதும் நினைவுக்கு வந்து போனது.

அவளின் முதல் பிறந்தநாளுக்கு டிரெஸ் வாங்கி கொண்டு போனதை சரியாக நினைவு வைத்து இரண்டாம் பிறந்தநாளுக்கும் சரியாக போன் பண்ணி கேட்டதும், நேரில் சென்று பார்க்கும் பொழுது சித்தி பின்னாடி போய் ஒழிந்து கொண்டு எட்டிப்பார்ப்பதும், தனக்கு பொண்ணு பார்க்க போகும் பொழுது நாட்டாமை படத்திலே மனோரமா பேசிய டயலாக்’யும் பேசி காட்டி எல்லாரையும் கலகலக்க வைத்ததையும், அவளின் குறும்புகளை நினைத்துக் கொண்டே அவனையறியாமலே கண்கள் கலங்குவதும், மனது எதிலேயும் நிலைப்பெறாமல் இருந்ததையும், மதிய சாப்பாட்டு நேரத்தில் அனைவரும் சாப்பிட அழைத்தும் பித்து பிடித்தவனாகவும் நொடிக்கொரு முறை அவள் நலம் பெற வேண்டுமென கடவுளிடம் வேண்டிக்கொண்டிருந்தான்.

செல்போனில் தம்பி நம்பர் பார்த்ததும் சற்றே பதறிய படியே கால் அட்டெண்ட் பண்ணினான் சந்துரு.

“ஹலோ! எப்பிடிடா இருக்கா இப்போ?”

“ஹிம் இப்போ பேச ஆரம்பிச்சிருச்சு! ஆனா ஒன்னுமே சாப்பிடலை! பால், ஜீஸ்’ன்னு எதோ கொஞ்சமா காலையிலே குடிச்சாளாம். இப்போதான் சித்தாப்பா’கிட்டே போன் பண்ணி வீட்டுக்கு வாங்க’ப்பா’ன்னு சொன்னாளாம். சித்தப்பா இப்போதான் எனக்கு போன் பண்ணி சொன்னார். நான் வீட்டிலே போயி பார்த்துட்டு கால் பண்ணுறேன்!”

“சரி வீட்டுக்கு போனதும் போன் பண்ணு! காலையிலே இருந்தே மனசை சரியில்லை!”

போனிலே பேசுனதுக்கப்புறம் மனதுக்கு கொஞ்சம் தெம்பாக உணர்ந்த சந்துரு தன்னுடைய மதிய சாப்பாட்டுக்கு சென்று வந்து தன்னுடைய வழக்கமான அலுவலக வேலையை தொடர ஆரம்பித்தான். இந்த வீக் அப்டேட் மீட்டிங்கிலே நிறைய பெண்டிங் இஸ்யூஸ் இருப்பதை கண்டு, அதை ஃபிக்ஸ் பண்ணுவதிலே குறியாக இருந்தாலும், மனதோரத்தில் ரூபிணி நலம்வேண்டி பிராத்தனையிலும் ஈடுப்பட்டு கொண்டே இருந்தான். தீடீரென அடித்த செல்போன் மணியை அணைத்து காதில் வைத்தான்.

“ஹலோ!”

“…”

“ஹலோ ராஜா!”

“…”

“டேய்.. யாரு இது?”

“……”

“எதுக்குடா அழுவுறே? என்னாடா ஆச்சு?”

“சந்திரா நம்ம ரூபி நம்மளை விட்டுட்டு போயிட்டா’டா!”

“டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்! என்னடா சொல்லுறே? இப்போதானாடா கொஞ்சநேரத்துக்கு முன்னாடி போன் பண்ணி பேச ஆரம்பிச்சாடா’ன்னு சொன்னே? என்னாடா நடத்துச்சு?”

“ஹிம்ம்ம்ம்ம்ம்… சித்தப்பாவுக்கு மட்டும் போன் பண்ணி வரச்சொல்லைடா! நம்ம அக்கா,அம்மா,அப்பா எல்லாருக்கும் போன் பண்ணி வரச்சொல்லிருக்கா? எல்லாரையும் ஒன்னா பார்த்துட்டு நம்மளை விட்டு போயிட்டா’டா!”

“அப்போ எல்லாரையும் கூப்பிட்டு பார்த்தவா என்னை மட்டும் பார்க்கமே போயிட்டாளே? தெய்வமே அவ என்கிட்டே பேசி பார்த்தது இல்லியே? எனக்கு இப்பிடியொரு சோதனையா?”

“டேய்… அப்பா பேசனுமின்னு சொல்லுறாங்க! இரு போனை கொடுக்கிறேன்!”

“ஹலோ அப்பா என்னாச்சு? என்ன நடக்குது அங்க? பக்கத்திலே ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போறதுக்கு என்னா? மதியத்திலே இருந்து என்னப்பண்ணிட்டு இருந்தீங்க??”

“அடேய் சந்திரா! எல்லாம் முடிஞ்சு போச்சு! இப்போ ஆஸ்பத்திரி வாசலிலே தான் நிற்கிறோம். நாங்க இங்கன அழக்கூட தெம்பில்லாமே இருக்கோமிடா! அந்த பச்சை குருத்து உசுரை விட்டு அஞ்சு நிமிசம் கூட ஆவலை! எதும் பேசுற நிலைமை’லே நாங்க இல்ல! இன்னும் 2 – 3 மணி நேரத்திலே அவளை கொண்டு அடக்கம் பண்ணப்போறோம்.”

“என்னாது! நான் வந்திறேன்ப்பா, அதுவரைக்கும் இருங்க!”

“டேய், இப்போ ஒனக்காக எல்லாம் இப்போ காத்துக்கிடக்க முடியாது, அவ ஒடம்பு ஏற்கெனவே விறைச்சுப் போச்சு, இனிமே வைச்சிருக்க வேணாமின்னு டாக்டர் சொல்லிட்டாங்க! அக்காவும் திருச்சி சித்தப்பா’வும் வந்ததும் நாங்க போயி அடக்கம் பண்ணிட்டு வந்துருவோம். இன்னும் ஒனக்கு 40 நாளிலே கல்யாணம், அதுனாலே நீ அங்கன இங்கன’லாம் அலைய வேணாம், இப்போ நான் எதுவும் பேசுற நிலைமையிலே இல்ல!”

“அப்பா! என்னா சொல்லுறீங்க? நான் வரவேணாமா? அவ கடைசியா ஒங்க எல்லாரையும் பார்த்துருக்கா! நான் அவளை கடைசியா ஒருதரம் பார்த்துகிறேனே? கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணுங்கப்பா! நான் இப்பவே சென்னை ஃபிளைட் பிடிச்சு வந்து அங்க இருந்து ஏதாவது மதுரை ஃபிளேட் பிடிச்சு எப்பிடியாவது நைட்குள்ளே ஊருக்கு வந்துறேன். அப்பா… பிளிஷ், எனக்காக இதை மட்டும் செய்யுங்க? இப்போ சித்தப்பா’கிட்டே போனை கொடுங்க, நான் பேசணும்…”

“நீ ஒன்னும் பண்ணவேணாம்! சித்தப்பா பேச்சே வரமாட்டாமே ஒட்கார்த்துருக்கான், அவன்கிட்டே என்னாடா பேசப்போற? பேசாமே இரு! இன்னும் ரெண்டு நாள் கழிச்சு ஊருக்கு வந்து பாரு…. இப்போ எதுவும் என்னாலே பேசமுடியாது.”

அப்பா வெடுக்கென்னு பேசி போனை வைத்ததும் ஏறக்குறைய பைத்தியம் பிடித்த நிலைமையிலே இருந்தான், இம்மாதிரியான அவசர ஆத்திரத்துக்கு கூட நேரத்துக்கு போகமுடியாத தன்னுடைய வேலை , மற்றும் தனிமையை நினைத்து அழக்கூட திரணியில்லாமால் மனது கனத்துப் போனான்.

இரண்டு நாள் கழித்து ஊருக்கு சென்றப்போது நேராக சித்தப்பா வீட்டுக்கு கூட மனதில்லாமல் தன்னுடைய வீட்டுக்கே சென்றான் சந்துரு.

“டேய் சந்திரா… இங்கப்பாரு எல்லாமே முடிஞ்சுப்போச்சு! இனி அங்கப்போயி எதுவும் என்னாச்சு? எதாச்சு’னு கேள்வி கேட்காதே? ரெண்டு நாளா சித்தி அழுது அழுது மயக்கமாகவே கெடந்தா, இப்போதான் ஏதோ எழுந்து ஒட்கார்ந்துருக்கானு சொன்னாங்க! ரொம்ப முக்கியமா நீ கலங்கி அழுதுறாதடா! அந்த வீடே நாங்க அழுது சிந்துன கண்ணிரா தான் இருக்கு…! போய் பார்த்துட்டு சித்தி,சித்தப்பாவேயும் சாப்பிட சொல்லு! நீ சொல்லியாவது சாப்பிடறாங்கன்னு பார்ப்போம்”

“ஹிம் சொல்லுறேன்!”

“சந்திரா, என்னாடா எல்லாமே முடிஞ்சதுப்புறம் வந்துருக்கே, அடக்கம் சரியா பண்ணியாச்சான்னு சோதனை பண்ண வந்தியா? இல்ல நீ வாங்கிக்கொடுத்த டிரெஸ் இருக்கா இல்லையான்னு பார்க்க வந்தியா? அன்னிக்குக்கூட சந்துரு’ண்ணே வாங்கின டிரெஸ் எடு! நான் போட்டுக்கிறேன்னு சொல்லிட்டே ஒன்னையே பார்க்கமே போயிட்டா!” தன்னை பார்த்ததும் இப்பிடி சொல்லி அழும் சித்தப்பாவை தேற்றுவதா இல்லை “ஒன்னை பார்த்ததும் ஒளிஞ்சுக்க ஒரு ஜீவன் இல்லாமே போயிருச்சே’ன்னு ஈனஸ்வரத்திலே அனத்துக்கிற சித்தியை சமாதானப்படுத்துவதா, எப்பவும் அண்ணே! அண்ணே’ன்னு காலை சுத்திக்கொள்ளும் தங்கைகள் இருவர் இப்போழுது மெல்ல தலையை தொங்கப்போட்டுக்கிட்டு அழுவதை சமதானப்படுத்துவதா என பயங்கர குழப்பத்திலே உட்கார்த்திருந்தான். அப்பா சொன்னமாதிரியே நாமும் அழுதுவிட்டால் இங்கு இன்னமும் துக்கம் பெரிதாகி விடுமென தன் உணர்ச்சிகள் அனைத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தான். சந்துருவுக்கு அனைவரும் அழும் இடத்தில் தான் மட்டும் அழாமல் இருப்பது தான் கல்நெஞ்சனா என கூட சந்தேகம் வர ஆரம்பித்தது. தன் வீட்டுக்கு சென்று இன்னும் மற்ற விபரங்களை கேட்டு தெரிந்துக் கொள்ளலாம், இங்கிருக்கும் பட்சத்தில் தன்னை பார்த்து மேலும் இவர்கள் அழுவார்கள் என்ற காரணத்தில் தன் வீட்டை நோக்கி விரைந்தான்.

“அப்பா.. இந்த சூழ்நிலையிலே எப்பிடிப்பா கல்யாணம் நடத்துறது? இன்னும் ஆறு மாசம் கழிச்சி தேதி குறிங்க!”

“இல்லே அதெல்லாம் வேணாம் சந்திரா! நேத்தே நான் போயி ஜோசியரை பார்த்து பேசியாச்சு! கல்யாணத்தை தள்ளிப்போட வேணாமின்னு சொல்லிட்டார், ,”

“என்னப்பா சொல்லுறீங்க? ஏன்? எழவு நடந்த குடும்பத்திலே இருந்து இன்னும் கொஞ்சநாளிலே கல்யாணமுன்னு சொன்னா நல்லாவா இருக்கு? எனக்கு பிடிக்கலை? கல்யாணத்தை கொஞ்சநாள் கழிச்சு வைங்க”

“அடேய்.. சொன்னதை கேளுடா! ரூபிணி செத்து மண்ணுக்குள்ளே போகலடா! நம்ம மனசுக்குள்ளே தெய்வமா நிறைச்சுட்டா! வானத்திலே இருந்து தெய்வம் வந்தா நான் உங்களோட தெய்வமின்னு சொல்லி நிருப்பிச்சிட்டு போகும்? இந்தமாதிரி குறை வாழ்வு தேவதைதான் நாங்க ஒங்க எல்லாருக்கும் தெய்வமின்னு வாழ்ந்து நிருபிச்சி காட்டிட்டு போயிருக்கு”ன்னு குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தார் சந்துருவின் அப்பா…”

இதற்கு மேலும் அப்பாவிடம் மேலும் பேசமுடியாது என நினைத்துக்கொண்டு பெரியவர்கள் எடுத்த முடிவை ஒத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டாலும், வெகு விமரிசையாக நடத்தப்பட வேண்டிய தன்னுடைய கல்யாணம் வெகு எளிமையாக நடத்தப்பட்டது குறித்து ஆறுதல் அடைந்தான். சந்துரு திருமணத்திற்கு பிறகு சிறிதுசிறிதாக இயல்பு வாழ்க்கைக்கு அந்த குடும்பம் பழக்கப்படுத்தி கொண்டாலும் அவளது மரணம் எல்லாரிடம் எதாவதொரு சமயத்தில் சலனத்தை ஏற்படுத்திக் கொண்டேயிருந்தது. அதற்கு தக்கவாறு சந்துரு மனைவி கர்ப்பகமாக இருந்தப் பொழுது பெங்களூர் வந்து கவனித்துக் கொண்டு மாதம் வந்ததும் ஊருக்கு பத்திரமாகவும் அழைத்து போனாள் சித்தி. அவர்கள் சென்ற் இரண்டாம் மாதத்தில் ஒரு மதிய வேளையில் வலி வந்து ஆஸ்பத்திரியில் சேர்க்க போகிறோம் என தகவல் வந்ததும் ஃபிளைட் பிடித்து ஊருக்கு போய் சேர்ந்தான், இன்னும் 20 – 30 நிமிசத்திலே குழந்தை பிறந்துருமின்னு நர்சம்மா சொல்லிட்டு போனதும், பிறக்கும் குழந்தை குடும்பத்தின் முதல் வாரிசு என்பதனால் முதலில் பார்க்கவேண்டுமென்று கூடியிருந்தனர். அவனுக்கான அமைதியை கிழித்துக் கொண்டு புகுந்தது புதிய சத்தமென்று, வெள்ளைத்துணியில் மலர்ந்த மொட்டென்று அலங்காரம் என்பதை இல்லாமல் தேவதையாக சிரித்து கொண்டுருந்தது.

“அம்மா! அப்பிடியே சுதா ஜாடை’ம்மா” இது அக்கா

“இல்ல சந்துரு ஜாடைதான்! இங்கப்பாரு இடதுகன்னத்திலே அவனுக்கு இருக்கிறமாதிரி மச்சமிருக்கு” இது சித்தி

“மூக்கு பெரிசா இருக்கிறத பார்த்தா அவ அப்பத்தா மாதிரி இருக்கா!” இது அப்பா

“இப்பவே எல்லாரையும் மொறைச்சு,வீராப்பா பார்க்கிறா? அப்போ இது உங்க ஜாடைமாதிரி தானே இருக்கா?” இது அம்மா

“இல்ல! இல்ல! இது நம்மகிட்டே வாழ்ந்த மாணிக்கமலரின் மறு பிறப்பு”ன்னு சொல்லி முதன்முதலாக ரூபிணி’க்காக அழுதான் சந்துரு.

மே 30, 2007

பார்த்த ஞாபகம் இல்லையோ – பாகம் 6

சிந்தாநதி’யின் ஞாபகம் -1

வெட்டிப்பயல்’ன் ஞாபகம் -2

CVR’ன் ஞாபகம் 3

ஜி’யின் ஞாபகம் – 4

கடைசியாக இம்சை அரசியின் ஞாபக மீட்டல்கள்:-

காவேரிக்கோ ஏதேதோ புரியாத உணர்வுகள் எழ ஆச்சர்யத்தில் இருந்து மீள முடியாதவளாய் குழம்பியபடி அமர்ந்திருந்தாள்.

==================-oOo-==================

திருமணத்திற்கு சென்று வந்ததிலிருந்து காவேரிக்கு ஓரே ஆச்சரியமாக இருந்தது. அன்று ஒரே ஒரு நாள் சில நிமிடங்கள் பேசி சென்றவன் எதற்காக இப்பிடி என்னை பற்றி எல்லா விபரங்களையும் சேகரிக்கனும், தான் தெரிஞ்சுக்கிட்டதை ஏன் சந்தர்ப்பம் எதிர்பார்த்து என்கிட்டே வந்து சொல்லனும், சே இந்த ஆம்பிளக எல்லாருமே இப்பிடிதான் இருக்காங்கன்னு மனதில் நினைத்துக் கொண்டாள். அச்சமயம் அவ்வழியே வந்த வசந்த் அவளிடம் வலிய வந்து பேச்சு கொடுக்கிறான்.

“ஹாய் காவேரி? என்ன பலத்த யோசனை?”

“ஹாய் வசந்த்! அதெல்லாம் ஒன்னுமில்லை! சும்மாதான் உட்கார்ந்து இருக்கேன், தட்ஸ் ஆல்”

“ஹிம் ஐ நோ! ஒன்னோட பெர்சனல் டீடெய்ல்ஸ் எதுக்கு நான் கலெக்ட் பண்ணேன்னு டவுட் இருக்கு? சரியா?”

“ஆமாம்! ஒங்களுக்கு…ம் ம் ஒனக்கு எதுக்கு இந்த வேலை?”

“அட நானா கேட்கலை தாயே! ஒன்னோட ஃப்ரண்ட் உமா’கிட்டே பேசிட்டு இருந்தேன், அவ சரியான ஓட்டை வாய் போலே! நான் ஒன்னு கேட்டா எல்லாத்தையும் சொல்லி முடிச்சிட்டா! அதுவுமில்லாமே சொல்லி முடிச்சிட்டு ஐ யம் ஸ்டெரைக்ட் ஃபார்வேர்ட்’ன்னு சொல்லுறா! நல்ல ஃபிரண்டா தான் பிடிச்சி வைச்சிருக்கே!”

“ஓ எல்லாம் அந்த ஓட்டைவாயி வேலைதானா? தென் ஓகே! அன்னிக்கு சடனா எல்லா டீடெல்ஸ் சொன்னதும் எனக்கு கொஞ்சம் டவுட் வந்துச்சு,”

“ஹிம் என்ன டவுட்?”

“ம்ம் சொல்லுறேன்! ஓகே வசந்த், கொஞ்சம் படிக்க வேண்டியது இருக்கு, அப்புறமா மீட் பண்ணலாம்”

இச்சந்திப்புக்கு பின்னர் தினமும் வகுப்பு முடிந்ததும் இருவரும் மாலையில் குறைந்தது 2 மணிநேரம் பேசி கொள்வதை பழக்கமாக்கி கொண்டனர்.கல்லூரி வளாகத்திலும், காவேரி தங்கியிருக்கும் ஹாஸ்டலிலும் காவேரி மற்றும் வசந்த்’யும் இணைந்து பேசுவதுதான் ஹாட் டாபிக்’ஆக இருந்தது, அதை நினைத்து காவேரியோ, வசந்தோ சட்டை செய்யாமல் இருந்தது தான் எல்லாருக்கும் மிக்க ஆச்சரியமாகவும், இன்னமும் பேசுவதற்கு தூண்டுக்கோலாகவும் இருந்தது, வசந்த் சில சமயங்களில் தன்னை பற்றி வரும் வார்த்தைகளுக்கு அமைதியாக சென்றாலும் காவேரி பற்றி வரும் சில கமெண்ட்களுக்கு மிகவும் கோபப்பட்டு சில சமயம் சண்டைக்கும் போகலானான்.

“என்னடி காவேரி? ஒன்கிட்டே நிறையவே மாற்றம் தெரிய ஆரம்பிச்சிருக்கே?” இப்பிடியொரு குதர்க்கமான கேள்வியோடு ஆரம்பித்தாள் உமா,

“நீ என்ன கேட்கவாறேன்னு எனக்கு கொஞ்சம் விளங்குது? அந்த வசந்த் நம்மோட கிளாஸ் கூட கிடையாது? ஏன் அவன்கிட்டே ரொம்ப நேரமா பேசிட்டு இருக்கேன்னு கேட்குறதுக்காக மாற்றமின்னு ஓரே வார்த்தையிலே கேட்டு பார்க்கிறே? அப்பிடிதானே?”

“வாவ்…கிரேட்’டீ! நான் என்ன கேட்கனுமின்னு நினைச்சனோ அதை நீயே சொல்லிட்டே? மரியாதையா சொல்லிரு?”

“Nothing Special உமா! Moreover நீ இப்பிடி பேசுறதும்,குதர்க்கமா கேள்வி கேட்கிறதையும் பார்க்கிறப்போ ரொம்ப வித்தியாசமா நான் ஃபீல் பண்ணுறேன்!”

“காவேரி! யூ மிஸ்டேக்கன் மீ! நார்மலா எல்லாருக்கும் வர்ற சந்தேகந்தான் எனக்கும் வந்துச்சு, ஐ யம் ஸ்டெரைக்ட் ஃபார்வேர்ட், ஸோ நான் கேட்டுட்டேன்!”

“ஹிம்! எங்களுக்குள்ளே அதெல்லாம் இல்லை! அப்பிடியே நடந்தாலும் நான் ஃபர்ஸ்ட் ஒனக்குதான் சொல்லுவேன்! ஓகே?”

உமா நேரடியாகவே வசந்த்’க்கும் தனக்கும் இருக்கும் உறவை பற்றி கேட்டதும் சற்று கோபப்பட்டாலும், அவன் மீது இவளுக்கு காதல் ஏதுவும் வந்துவிட்டதா என கூட கொஞ்சமே குழம்பிதான் போனாள். சரி இதை பற்றி அவனிடமே மறுமுறை சந்திக்கும் பொழுது பேசிக்கொள்ளலாம், என முடிவு செய்து கொள்கிறாள்.

“வசந்த்! நான் இப்போ கொஞ்சம் கன்பீயூசன் ஸ்டேஜ்’லே இருக்கேன்’ப்பா! உமா என்கிட்டே வந்து நீ வசந்த் லவ் பண்ணுறீயான்னு கேட்கிறா? வாட் த ராங் வித் அஸ், நாமே நார்மலா தான் இருக்கோம், ஏன் அவங்களுக்கு அப்பிடியொரு டவுட் வருது? டூ யூ ஹாவ் எனி ஐடியா?”

“காவேரி, இந்த லைப் அதாவது காலேஜ் கேம்ப்ஸ்’க்குள்ளே ஒரு பொண்ணும் பையனும் பேசிக்கிட்டா அது லவ் தான்னு கன்பார்ம் பண்ணுவாங்க… Free’யா விடு, எதுக்கும் டென்சன் ஆவாதே? By the way நானே இதை பத்தி பேசலாமின்னு இருந்தேன்! நீயே பேசிட்டே!”

“ச்சே! என்ன உலகம்’டா சாமி! வசந்த் நீயே சொல்லிருக்கே! நீ வீட்டுக்கு ஓரே பையன், அதுனாலே எந்த உறவுமுறை பாசமும் இல்லை, அதுவுமில்லாமே ரொம்பதூரத்திலே இருந்து வந்து இங்க நீ தங்கி படிக்கிற! அதேமாதிரி நிலைமைதான் எனக்கும், எனக்கு அம்மா கிடையாது, தம்பி,தங்கை,அண்ணன்,அக்கா’ன்னு எந்த பந்தபாசமும் கிடையாது, இப்போ இவங்கல்லாம் பேசுறதே பார்க்கிறோப்போ எனக்கு ஒரு ஃபிரண்ட்’ம் இல்லாமே போயிரும் போல இருக்கு!”

“அட ரொம்பதான் ஃபீல்’ஐ போடுறே? ஃFree’யா விடு! Be normal….காதல் வந்ததுக்கு காரணகாரியங்கள் சொல்லாலாம், ஆனா நமக்குள்ளே இருக்கிற நட்பை பத்தி எடுத்து சொல்லுறதுக்கு என்ன காரணம் சொல்லுவே? அவங்க என்ன சொன்னாலும் விட்டு தள்ளிட்டு போயிட்டே இரு, ஒருத்தருக்கு நீ பதில் சொல்ல ஆரம்பிச்சேனா எல்லாருக்கும் பதில் சொல்லிட்டே இருக்கனும். நம்ம மேலே தப்பான அபிப்ரயாத்தை வளர்ந்தவங்க அவங்கதான், நாமே இல்லை, அவங்களா அதை மாத்திக்குவாங்க….”

“ஹிம் நீ சொல்லுறதும் சரியாதான் இருக்கு வசந்த, ஆனா சிலசமயங்களிலே நான் செய்யுறது எனக்கே சரியா தப்பான்னு குழப்பம் வரும். அந்தமாதிரி சமயங்களிலே முடிவெடுக்க முடியாமே திணறப்போ நீ எனக்கு ஆதரவு கொடுக்கிறே? அழனுமின்னு தோணுனாலும் தோள் கொடுக்கிறே? சிரிக்கனுமின்னா கூட சேர்ந்து சிரிக்கிறே? நீ கிரேட்’டா!”

“ஓ இதை வைச்சிதான் இந்த கவிதை எழுதினேயா? , அதை சிலசமயம் விடாமே படிச்சிட்டே இருப்பேன்!”

“அப்பிடியா? எந்த கவிதை?”

“ஆறுதல் சொல்ல நீ இருந்தால்,
அழுவதில் கூட சுகம் உண்டு.”

“ஹி ஹி அது நான் எழுதலை! ஒரு இடத்திலே சுட்டது…!”

“அடபாவி, ஒன்னை போய் பெரிய கவிதாயினி’ன்னு நினைச்சேன்னே? அப்போ இதை எழுதினதும் நீயில்லையா?

தந்தை அடித்ததை
தாயிடம் சொல்லி அழும்
பிள்ளை போல..

என் மார்பில் சாய்ந்து
தேம்பிக் கொண்டிருக்கிறது
நம் நட்பு!

“இது எழுதினது நாந்தான்”

“ஹிம் இந்தமாதிரி நட்பை மையமா வைச்சு எழுதுனா கவிதைகளை வைச்சு தான் ஒன்கிட்டே ஃபிரண்ட்ஷிப் வைச்சிக்கனுமின்னு தோணுச்சு காவேரி”

“ஹிம் ஃபிரண்ட்ஷிப் வைச்சிக்கிறதுக்கு ரீசன் சொல்லுறே? நல்லாயிரு! சரி இப்போ நான் கிளம்புறேன்!”

இப்பொழுது கொஞ்சம் தெளிவான சிந்தனையோடு தன்னுடைய அறைக்கு காவேரி செல்கிறாள். அங்கே தன் அப்பா போன் பண்ணினதாகவும் வந்தால் பேச சொன்னதாகவும் உமா சொல்லியதால் போன்பூத்’க்கு செல்கிறாள் காவேரி.

“ஹலோ அப்பா நல்லாயிருக்கீங்களா?”

“ஹிம் நான் நல்லாயிருக்கேன்.. யாரு கூட காவேரி பேசிட்டு இருந்தே? உமா என்னோமோ சொல்லுறா? எனக்கு எதுவும் பிடிபடலை?”

“ஹய்யோ! அதெல்லாம் ஒன்னுமில்லப்பா! அவ ஏதாவது விளையாட்டுக்கு சொல்லிருப்பா? நீங்க எதுவும் நினைச்சிக்காதீங்க?”

“சரிம்மா! ஒடம்பை நல்லா பார்த்துக்கோ! நல்லா படி! போனை வைச்சிறேன்”

எப்பவும் தன்னிடம் நன்றாக பேசும், இன்று சரியாக பேசாத காரணத்தை தெளிவாக ஊகித்தாள் காவேரி. தான் இல்லாத நேரத்தில் வந்த போனில் தேவையில்லாத விஷயங்களை பேசி அப்பாவிடம் குழப்பத்தை உண்டு பண்ணியிருப்பது உமா வேலைதான்.

“உமா! அப்பாகிட்டே என்ன சொன்ன?”

“நான் ஒன்னுமே சொல்லலையே? ஏன் போன் பண்ணிட்டு வந்ததும் இப்பிடியொரு கேள்வி கேட்கிறே?”

“சந்தேகமா யார்கிட்டே இவ்வளவு நேரமா பேசிட்டு இருந்தேன்னு எங்கப்பா கேட்டாரு? எப்பவும் அந்தமாதிரியெல்லாம் கேள்வி கேட்கமாட்டார் தெரியுமா? நான் எத்தனை தடவை ஒன்கிட்டே சொல்லிட்டேன், இன்னும் நீதான் புரிஞ்சுக்காமே வசந்த்யும் என்னையும் தப்பா நினைச்சிட்டு இருக்கே?”

“காவேரி! திரும்ப திரும்ப ஒரேமாதிரி சொல்லி போரடிக்காதே! ப்ளிஷ் டெல் மீ எஸ் ஆர் நோ?”

“கட்டாயமா அதுக்கு என்னாலே தெளிவா பதில் சொல்லமுடியும்… நோ..நோ…”

“அப்புறம் எதுக்கு ரெண்டு பேரும் காலநேரம் இல்லாமே பேசிட்டே இருக்கீங்க…? எனக்கு தெரிஞ்சு கிளாஸ் ஹவர்ஸ் போக, ஒன்னை இங்க ஹாஸ்டலிலே பார்த்ததே கிடையாது, எல்லாநேரமும் அவனோட தான் அந்த மரத்தடி கிழே பேசிட்டு இருக்கீங்க! அந்த மரத்தடிக்கு கூட இப்போ பசங்க வசந்தகாவேரி மரமின்னு பேர் வைச்சிட்டாங்க தெரியுமா?”

“உமா! உமா!! எத்தனை தடவைதான் நான் சொல்லுறது, நமக்கு தானா அமையுற உறவுமுறைகளான அம்மா தவிர்த்து எதாவது ஆதாயம் இருக்குமின்னு எதிர்ப்பார்ப்பு’லே தான் இருப்போம். அண்ணா’ன்னா நம்மை படிக்க வைப்பான், நாமே படிச்சு முடிஞ்சதும் வேலை வாங்கி கொடுப்பான், நல்ல வாழ்க்கையை அமைஞ்சு தருவான்’ன்னு நம்மளையறியமாலே எதிர்பார்க்கிறோம், அது அவங்ளோட கடமைன்னு நாமே அதை சொல்லி தப்பிச்சுக்கலாம், இந்தமாதிரி நிறையவே நம்ம உறவுமுறைகளுக்கு எடுத்துக்காட்டு கொடுத்துட்டே போகலாம். ஆனா நட்புன்னு வர்றோப்போ தான் அதுக்கு எதையும் எதிர்பார்த்து ஏற்படுத்திக்க முடியாது. வசந்த் கூட வந்த நட்பு சாதாரணமா தான் இருந்துச்சு, ஆனா சில சம்பவங்களிலே அது இன்னமும் ஸ்டராங்’கா ஆகிருச்சு,”

“என்னோமோ காவேரி! சினிமா டயலாக் மாதிரியெல்லாம் பேசுறே? அப்பிடி என்னா ஒங்க ஃபிரண்ட்ஷிப்’லே ஸ்ட்ராங்’க்கின இன்ஸிண்ட் நடந்துச்சு?”

“ஹிம்! என்ன பேசுனாலும் அதை கிண்டல் பண்ணுறதே ஒன்னோட வேலையா போச்சு, ஒரு நாள் நம்ம காலேஜ் கிரவுண்ட்’லே சைக்கிளிலே ரவுண்ட் அடிச்சிட்டு இருந்தேன், அப்போ என்னயறியாமலே என்னோட துப்பட்டா சைக்கிள் சக்கரத்திலே சிக்கி அய்யோ அதே சொல்லவே முடியலை, துப்பட்டாவே சுடி’யோட பின் பண்ணிருந்ததுனாலே அதுவும் சேர்ந்து இழுந்து கிழிச்சு போச்சு,என்னோட நிலைமையே அப்போ நினைச்சு பாரு, எவ்வளவு தூரம் கஷ்டப்பட்டுருப்பேன் அங்க இருந்த பசங்க முன்னாடி, அங்க விளையாடிட்டு இருந்த வசந்த்’தான் தன்னோட ஷர்ட்’ஐ கொடுத்து ஹெல்ப் பண்ணினான், அப்போ சில ஆம்பிளக’கிட்டே இருக்கிற அந்த விகல்ப புத்தி அவன்கிட்டே சுத்தமா இல்லை. இன்னமும் நிறைய இருக்கு, அவனை நீங்கல்லாம் சொன்னமாதிரியெல்லாம் கற்பனை பண்ணி பார்க்கமுடியலை, எங்கக்கிட்டே ரெண்டு பேர் நடுவே இருக்கிறது சுத்தநட்பு… அவ்வளோதான்,”

“காவேரி! என்னாடி ஒரு எக்ஸ்டரா-ஆர்டெனரி கேர்ள் மாதிரி பிஹெவ் பண்ணுறே”

“நான் ஆர்டெனரி கேர்ள் தான், வாழ்க்கையிலே நடக்கிற விஷயங்களை சாதாரணமா அதோட போக்கிலே வாழ்ந்துட்டு தான் இருக்கேன், ஆனா என்னை சுத்தியிருக்கிற சில பேர் புரிஞ்சுக்காமே தான் நான் ஒரு எக்ஸ்டரா-ஆர்டெனரியா’ன்னு நினைக்கிறாங்க… அதை நான் தப்புன்னும் சொல்லலை… “

==================-oOo-==================

நண்பர்களே! இந்த தொடர்கதை மூலம் ஒரு புதிய முயற்சி. இந்தக் கதை தொடர்கதையாக வலைப்பதிவு சங்கிலி வழியாக எடுத்துச் செல்லப் படும். இந்த தொடரின் அத்தியாயங்களை வெவ்வேறு பதிவர்கள் தொடர வேண்டும். இதே தலைப்பில் தொடர் எண் இட்டு எழுதப் பட வேண்டும். ஒவ்வொருவரும் கதையை எழுதி இந்த குறிப்பை இறுதியில் இட்டு அடுத்து தொடர இன்னொருவரை அழைக்க வேண்டும். இந்த வித்தியாசமான முயற்சிக்கு தோள் கொடுக்க வாருங்கள்.

அடுத்த அத்தியாயத்தை உளி கொண்டு செதுக்க அண்ணன் செதுக்கல் மன்னன் தேவ் அவர்களை அன்புடன் அழைக்கிறேன்……. ;-)

பி.கு:- கதை’க்கு தேவைப்பட்ட கவிதைகளை G3 செய்ய அனுமதி வழங்கிய கவிதாயினி காயத்ரி அக்கா வாழ்க! வாழ்க!!

அடுத்த பக்கம் »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.